நாமலுக்கும் சாமர சம்பத்திற்கும் மட்டும் பிணை மறுக்கப்படுகிறது!
நாமல் ராஜபக்சவிற்கும் தமக்கும் மாத்திரம் பிணை மறுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மீது முன்வைத்துள்ளார்.
நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்ட போதிலும், மேல் நீதிமன்றத்தில் தமக்கு பிணை நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதவான் நீதிமன்றத்திலும் மேல் நீதிமன்றத்திலும் கடமையாற்றும் நீதவான் மற்றும் நீதிபதி ஆகியோர் நன்றாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டு, மற்றொரு நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்படும் போது, அது நீதிமன்றக் கட்டமைப்பின் நம்பகத்தன்மைக்குக் குந்தகத்தை விளைவிக்கும் அல்லவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, இந்த விவகாரங்களை நீதி அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராம உத்தியோகத்தர்கள் அல்லது வேறு எந்தவொரு அரச ஊழியரும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்குப் பிணை வழங்கப்படுவதாகவும், எனினும் தமக்கும் நாமல் ராஜபக்சவிற்கும் மாத்திரம் பிணை மறுக்கப்பட்டு வருவதாகவும் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.