அரசியல் முகாம்களாக பிளவுபட்டுள்ள தென்னிலங்கை அரசியல்! பிரபல தொழிலதிபர் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் இரு முக்கிய கட்சிகளும் பிளவுபட்டு, இழுபறிப்போட்டி நடத்தப்பட்டால் எதிர்கால தலைமுறையும் பொருளாதாரமும் அழியும் நிலைமை ஏற்படலாம் என பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன எச்சரித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற விழாவில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
போதைப்பொருள் அச்சுறுத்தல்
நாட்டிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், இதற்காக பொலிஸாரும், ஆயுதப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் எனும் தீமையை ஒழிக்க, குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கப்பட வேண்டும். நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவது பற்றி கதைகள் காலத்திற்கு பிறகு மறக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே கருத்துக்கு வந்து, கல்விக்கான தேசிய கொள்கையை வகுக்க வேண்டும் என்றும், அதன்படி, மொத்த தேசிய உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூகத்திற்கு அறிவுரை
இல்லையெனில், இரு கட்சிகளும் பிளவுபட்டு, இழுபறிப்போட்டி நடத்தப்பட்டால், எதிர்கால தலைமுறையும் நாட்டின் பொருளாதாரமும் அழிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது பௌத்த தேரர்கள் அரசியல் முகாம்களாக பிரிவது அருவருப்பானது என்றும், சமூகத்திற்கு அறிவுரைகளை வழங்கும் தேரர்களின் மத்தியில் ஒரு சில சிறுபான்மையினரின் செயல்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நாட்டின் பொருளாதாரமும் அழிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.