தாயகம் எங்கிலும் மாவீரர் துயிலுமில்லம் அஞ்சலி நிகழ்வுகளுக்காக தயார் நிலையில்!
தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும்.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கிலும் இன்று(27.11.2026) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள்
இதனை முன்னிட்டு இரு மாகாணங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பல்வேறு நினைவேந்தல் இடங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர்களின் உறவினர்கள், நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கச் செய்யப்பட்டு ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்படவுள்ளது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு
மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம்( 27.11.2026) அனுஷ்டிக்கப்பட உள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, துயிலுமில்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தி, அலங்கரிக்கும் பணிகள் துயிலுமில்ல பணிக் குழுவினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு
வளாகம் எங்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, நினைவேந்தல் சுடரேற்றுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களை போன்றே இம்முறையும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான சகல அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம்(27) மாலை நடைபெற உள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.




