விகாரமகாதேவி பூங்காவில் வெடித்த போராட்டம் - உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சட்டவிதிகளை மீறியதாகவும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு - விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளைப் பரிசீலித்த மேலதிக நீதவான் லஹிரு சில்வா, கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உடனடியாக கைது செய்ய உத்தரவு
முறையான அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியவர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், பூங்கா நிர்வாகத்தினர் தமது கடமைகளைச் செய்வதற்கு இடையூறு விளைவித்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாகப் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு போராட்டக்காரர்கள் இடையூறு ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளிப் பதிவுகளைப் பரிசோதித்து, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், போராட்டம் முடிவடைந்துள்ளதாகப் பொலிஸார் அறிவித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தொடர்பாக முன்னர் பெறப்பட்ட இடைக்கால உத்தரவு குறித்த வழக்கு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO