மருதானையில் ரகசிய சாம்ராஜ்யம்! 21 வெளிநாட்டவர்கள் கைது பின்னணியில் உலகளாவிய நிதி மோசடி
கொழும்பு மருதானை தொழில்நுட்ப சந்திப் பகுதியில் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் பாரிய இணைய நிதி மோசடி மையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
நவம்பர் 2ஆம் திகதி மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி சோதனை நடவடிக்கையின்போது, சீனா, பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரிய இணைய நிதி மோசடி
கைது செய்யப்பட்டவர்களில் 12 சீனப் பிரஜைகளும், 6 பங்களாதேஷ் பிரஜைகளும், 3 இந்தியப் பிரஜைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த இவர்கள், விசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்ததுடன், இணையம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நீதிமன்றத்தின் தேடுதல் உத்தரவைப் பெற்று இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கணினிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த குழுவினர் எவ்வாறான இணைய நிதி மோசடிகளில் ஈடுபட்டனர், அவர்களுக்குப் பின்னால் செயற்பட்டவர்கள் யார், இந்த மோசடி வலையமைப்பின் சர்வதேசத் தொடர்புகள் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 21 வெளிநாட்டவர்கள் ஒரே இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.