வெளிநாட்டு பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றம் வந்த கோட்டாபய : தீர்ப்பு தொடர்பில் வெளியான உத்தரவு
புதிய இணைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் இணைத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என கோட்டை நீதவான் பசன் அமரசேன அறிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று(04.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணத்தடை
நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,வெளிநாடு சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் இலங்கைக்குத் திரும்புவாரா என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்கான முறையான சட்ட நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டால், பயணத் தடையை நீக்குவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய சட்ட ஏற்பாடுகள் இல்லாவிட்டால் அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்தேகநபராகப் பெயரிடப்படாத நிலையில், பயணத் தடையை நீக்கிய பின்னர் அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக தகவல் - அமல்
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கிக்கொள்ளும் நோக்கில் அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.