தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நோர்வூட் நகரில் திடீர் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை
எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நோர்வூட் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அண்மையில் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள கோலி சோடா குளிர்பான வகை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனை
அத்துடன், உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிலையங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, சுகாதாரமற்ற முறையில் நடத்திச் செல்லப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பிலும் அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தினர்.
காலாவதியான உணவுப் பொருட்கள்
சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்ற காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பழுதடைந்த மரக்கறித் தொகைகளும் சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

