இலங்கையின் மிக வயதான மனிதர் குறித்து வெளியான தகவல்
இலங்கையின் மிகவும் வயதாகி வாழும் மனிதர் தொடர்பில் தகவல்களை முதியோர்களுக்கான தேசிய செயலகம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையின் மிக வயதான வாழும் மனிதராகக் கருதப்படும் கரந்தெனிய - அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த பி. எச். மெனியால் தனது 111 வயதை எட்டியுள்ளார்.
1915 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி பிறந்த மெனியால், தனது முதிர்ந்த வயதிலும் கூர்மையான நினைவாற்றல் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய நல்ல மன ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் ஆதரவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நல்ல மனநிலையுடனும் உள்ளார் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
மெனியால் ஐந்து மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உட்பட 9 பிள்ளைகளின் தந்தையாவார். அவரது மூத்த பிள்ளை காலமான போதிலும், எஞ்சிய 8 பிள்ளைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், அவரது குடும்பத்தில் 92 பேரப்பிள்ளைகளும் 12 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
அவருக்குத் தேவையான பராமரிப்பு, வசதிகள் மற்றும் சமூகத்துடன் இணைந்திருப்பதற்கான வாய்ப்புகளை வழங்கி, அவரது நலனை அவரது பிள்ளைகள் இணைந்து உறுதி செய்து வருவதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மிக வயதான வாழும் மனிதரான அவரை கௌரவிக்கும் வகையில், முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் கரந்தெனிய பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.