முக்கிய அமைச்சர் ஒருவரின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
தற்போதைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, சிங்கள தேசியவாத அரசியல் கட்சிய புத்தசாசன அமைச்சுக்கு நேரில் சென்று மனு ஒன்றைக் கையளித்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜயந்த லியனகே, இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்தையோ அல்லது பௌத்த பிக்குகளின் துறவற ஆடையையோ இழிவுபடுத்தியதில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆளும் தரப்பினரே பௌத்த மதத்திற்கும் பிக்குகளின் உடைக்கும் தொடர்ச்சியாக இழிவை ஏற்படுத்தி வருவதாக அவர் சாடியுள்ளார்.
கடும் குற்றச்சாட்டு
மேலும், மகா சங்கத்தினர் நாடெங்கிலும் பாதயாத்திரைகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்த போது, புத்தசாசன அமைச்சர் என்ற வகையில் அவர் எந்தவொரு தலையீட்டையும் செய்யவோ, பிக்குகளைச் சந்தித்துப் பேசவோ முன்வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 9 ஆவது சரத்திற்கு அமைவாக பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்த அமைச்சர், அரசாங்கத்தின் சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், "அமைச்சர் ஒரு பௌத்தர் அல்லர் என்பது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அதனை அவரோ அல்லது அரசாங்கமோ இதுவரை மறுக்கவில்லை.
தற்போது திடீரெனத் தான் ஒரு பௌத்தர் எனக் காண்பிப்பதற்காக பிக்குகளிடம் சென்று விளக்கம் அளித்து வரும் அமைச்சர், தனது கிராமத்து விகாரையின் தலைமை தேரரை அழைத்து வந்து தான் ஒரு பௌத்தர் என்பதைப் பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.