கப்பல்துறையில் துப்பாக்கிச் சூடு : கடற்படை வீரர் உயிரிழப்பு
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் நேற்று(02.11.2026) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்குவைத்து இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில், திருகோணமலை பேதிஸ்புர பேக்கரி வீதியில் வசிக்கும் எஸ்.என்.ஆர்.வி.கே.ஏ. கயான் மதுசங்க என்ற 39 வயதுடைய கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த அவர், தனது முச்சக்கரவண்டியில் வாடகைப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை - கண்டி வீதியில், கப்பல்துறை பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரமொன்றின் பின்னால் மறைந்திருந்த துப்பாக்கிதாரி ஒருவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு T56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan