பகிடிவதைக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் தாக்குதல்! பல்கலைக்கழகத்தில் வெடித்த வன்முறை
கம்பஹா விக்ரமாராச்சி தேசிய சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில், பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
புதிதாகப் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்களைப் பகிடிவதை செய்வதற்கு எதிராகச் சில மாணவர்கள் குரல் கொடுத்ததுடன், இது தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
பகிடிவதைக்கு எதிர்ப்பு
இதனால் ஆத்திரமடைந்த சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று, பகிடிவதைக்கு எதிராகச் செயற்பட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மரக்கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில் காயமடைந்த பல மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும், பகிடிவதைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்துவதற்குமே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் 1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க பகிடிவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், பகிடிவதை மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைச் செயல்கள் கடுமையான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், பல்கலைக்கழக மட்டத்திலும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
பகிடிவதை என்பது பல்கலைக்கழகப் பாரம்பரியம் அல்ல; அது மாணவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வன்முறைச் செயல் என்பதால், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.