கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள் - சாடிய பிரதமர்
இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான் பல படுகொலைகள் இடம்பெற்றன, அந்தச் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்தான் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசுகின்றார்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2026) நடைபெற்ற நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் மிகவும் கவலைக்குரியது, துரதிர்ஷ்டவசமானது. இதனை அரசு எப்போதுமே அலட்சியப்படுத்தவில்லை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலே இந்த மோதலுக்கும் உயிரிழப்புக்கும் காரணம் எனக் கூற முடியாது.
அரசியல் நோக்கத்திற்காக கொல்லப்பட்ட சிறைக்கைதிகள்
சிறைச்சாலை மறுசீரமைப்பை ஒரே இரவில் முன்னெடுத்துவிட முடியாது. எனினும், கட்டமைப்பில் காணப்படும் நெரிசல் மற்றும் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் திட்டமிட்ட வகையில் சிறைச்சாலைகளில் மோதல்கள் உருவாக்கப்பட்டு, அரசியல் நோக்கத்துக்காகச் சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.

2022ஆம் ஆண்டில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த கலாசாரமே அன்று காணப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் அவ்வாறான நிலை கிடையாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் சிறைச்சாலை நெரிசல் பிரச்சினை தோற்றம் பெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர். குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது குறைந்தபட்சமாவது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri