ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்த முன்னாள் வீரர்
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான பிரமோதய விக்கிரமசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தமது பதவி நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டதாகக் கூறி, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கிய தமது இரண்டு ஆண்டு காலப் பதவி, கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவினால், பதவிக் காலம் முடிய முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன் அறிவிப்பு, போதுமான நியாயமான காரணங்கள் அல்லது முறையான சட்ட நடைமுறைகள் எதுவுமின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நடைமுறையிலிருந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததன் மூலம், அக்குழு பகுத்தறிவற்ற முறையிலும், இலங்கை கிரிக்கெட்டின் நலன்களுக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒப்பந்த மீறல், வருமான இழப்பு மற்றும் தனது தொழில்முறை நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, உரிய வட்டி மற்றும் சட்டச் செலவுகளுடன் சேர்த்து 75 மில்லியன் ரூபாயை நட்டஈடாக வழங்க வேண்டும் என அவர் இந்த வழக்கின் மூலம் கோரியுள்ளார்.
இரண்டு ஆண்டு காலப் பதவியை ஏற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட்டுக்காகத் தனது நேரத்தையும் அனுபவத்தையும் முழுமையாக அர்ப்பணிக்கும் நோக்கில், தனது பிற தொழில்முறை ஈடுபாடுகளையும் வணிக நலன்களையும் ஒதுக்கி வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, ஒப்பந்த அடிப்படையில் பெற வேண்டிய ஊதியத்தை இழந்ததுடன், கைவிட்ட வணிக வாய்ப்புகளினால் மேலதிக நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இச்செயல் தனது தொழில்முறைத் தகுதி, நம்பகத்தன்மை மற்றும் நற்பெயருக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்வுக்குழுத் தலைவராகத் தனது முந்தைய பதவிக் காலத்தில் இலங்கை அணி அடைந்த முக்கிய வெற்றிகளையும் இந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெரிவுக்குழு தலைவராக பதவி வகித்த காலத்தில், 2022 ஆம் ஆண்டு டி20 ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி வென்றமை, 2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியமை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூடத் தோல்வியடையாமல் சாம்பியன் பட்டம் வென்றமை போன்ற சாதனைகளை பிரமோதய விக்ரமசிங்க பட்டியலிட்டுள்ளார்.