நாட்டை விட்டு தப்பியோடும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு சிக்கல்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அல்லது பிற அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை அமைப்புகளுக்கு அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சி
பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் நபர்களை இந்த அமைப்பு கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்தவும் விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர், வெளிநாடு சென்று திரும்பத்தவறிய பல அரசியல்வாதிகளை உளவு அமைப்புகள் தற்போது விசாரித்து வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தை
அவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
அவர்களது விடுதலை சட்டப்பூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.