அமெரிக்கத் தடையை மீறி புதிய உச்சம் தொட்ட ஈரானின் எண்ணெய் விற்பனை!
ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஈரானின் திட்டமிடல் மற்றும் வரவுசெலவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான 'மெஹர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ஈரானின் எண்ணெய் விற்பனை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மாதாந்த வருவாயாகும்.

ஆயினும், அமெரிக்க தடையை மீறி ஈரான் எவ்வாறு தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
கடற்படைத் தடை அமலில் இருந்தபோதிலும், ஈரானிய அரசு ஏற்கனவே கடலில் நிலைகொள்ளச் செய்திருந்த தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் விற்பனையைத் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கலாம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
எனினும், தற்போதும் அதே நடைமுறைதான் தொடர்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதேவேளையில், ஈரானிய எண்ணெயைச் சுமந்து செல்லும் ஈராக்கியக் கப்பல்கள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணை வழியே பயணிக்க தெஹ்ரான் அனுமதித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.