வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!
வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்கள் இன்று (19.09.2026) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின்(வயது 60) என்ற பெண்ணும் அவரது மகனான அயந்தன்(வயது 35) என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


