வெடுக்குநாறி ஆலய விவகாரத்திற்கு ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் :ஆறுதிருமுருகன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்களை உடைத்தமை குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சைவமக்களின் தொன்மை
அந்த அறிக்கையில்,வவுனியா - நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன், பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளதுடன் சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்களை உடைத்துள்ளமை கண்டனத்துக்குரியது.
சைவமக்களின் தொன்மைகளை அழிக்கும் செயற்பாடு தொடர்கிறது. இது திட்டமிட்டு நடைபெறுகிறது. அரசாங்கம் இத்தகைய செயல்களை நிறுத்த வேண்டும்.
தொல்லியல் திணைக்களம்
தொல்லியல் திணைக்களம் ஆதி சைவக் கோவில்களை சைவமக்கள் பராமரிப்பதற்கு தொடர்ந்து இடையூறு செய்வதும் வேதனைக்குரியது.
இலங்கையின் ஜனாதிபதி, விக்கிரகங்களை உடைத்தமை குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலயத் திருப்பணி நடைபெறுவதற்கு இந்து கலாச்சாரத் திணக்களம் உரிய அனுமதிகளை வழங்க வேண்டும். இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து சைவசமயத்துக்கு வரும் இன்னல்களை போக்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க
வேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.