வெடுக்குநாறி மலை விவகாரம்: யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் சிவலிங்கம் இடித்தழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய தினம் (27.03.2023) முன்னெடுக்கப்படும் இப்போராட்டம், யாழ். பல்கலைக்கழக முன்றிலில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் மண்திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, வெடுக்குநாரி மலை கச்சத்தீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா, இராணுவமே வெளியேறு கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இப்போராட்டத்தின்போது, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும் போது,
இனம் தனது சுயநிர்ணயத்தினை தக்க வைக்க வேண்டுமாயின் மொழி, மதம் மற்றும் பண்பாடுகள் என அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் தமிழர்களின் பண்பாடுகளைச் சிதைக்கும் முயற்சியினை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.
வட கிழக்கில் தொடர்ச்சியாக நிலாவரை, குறுந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு என பல்வேறு நில ஆக்கிரமிப்புகளைச் செய்து பண்பாட்டினை அழித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.
பண்பாட்டு அம்சங்களைப் பேண வேண்டிய தொல்பொருள் திணைக்களங்களும் அரசுடன் இணைந்து செயற்படுவதானது தமிழினத்தினை அழிப்பதன் அடிப்படையாகவுள்ளதாகத் தெரிவித்தார். பண்பாடு மற்றும் கலாச்சாரங்களைத் தக்கவைத்து ஒரு இனம் தமது சுய உரிமைகளைக் கேட்டுக் கொள்ளலாம் எனச் சர்வதேசம் கூறுகின்றது.
உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்
அவ்வகையில் தேசியம், மரவு வழித்தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றை இல்லாதொழித்து விட்டால் எவ்வாறு எமது இனத்தினை மீட்பது? அத்தோடு உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை அடக்கி ஒடுக்கி முழுவதுமாக சிங்கள, பௌத்த நாடாக உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஆகவே, இவற்றிற்கு எதிராக மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் குரலெழுப்பி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இரா.தர்ஷனின் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையிலே எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம் கோட்டாபய ராஜபக்சவாக இருக்கலாம் தற்பொழுது ஆட்சி கதிரையில் இடம்பிடித்துக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவாக இருக்கலாம் எதிர்காலத்தில் ஜனாதிபதி கதிரைக்கு ஆசைப்படும் சஜித் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமது கதிரைகளை தக்கவைக்க வேண்டுமெனில் ஆமத்துறுக்கள் சொல்வனை நிகழ்த்தவேண்டும்.
இல்லையெனில் அவர்களுடைய கதிரைகள் பறிக்கப்படும்.இதற்கான ஒரு முன்னெடுப்பே வடக்கில் திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கல் ஆகும். இது யார் ஜனாதிபதியாயினும் நிகழும் நிச்சயமான சம்பவமே ஆகும்...
மேலும் அண்மையில் கச்சை தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா இடம்பெற்றது அங்கு வந்திருந்த இந்திய இலங்கை பக்தர்களுக்குக்கூட ஒழுங்கான வசதிகளை வழங்காத கடற்படை அவ்விடத்திற்கு தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வந்த ஆமதுறுக்களை விசேட கவனிப்புடன் கவனம் செலுத்தினர். அதன் பிரதிபலிப்பு இன்று கச்சைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரை.
அதிகாரம் மிகுந்தவர்கள்
வெடுக்கு நாறி மலையில் காடையர்களால் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூசையை செய்வதற்குப் பூசாரிக்கு நீதிமன்று அனுமதி வழங்கியும் பொலிஸார் இதனை தடுக்கின்றனர்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் நடுநிலையாக செயற்படுகிறதா? இன்று இந்த போராட்டம் நடக்கும் ஒரு மணியான காலப்பகுதிவரை வெடுக்குநாறிமலைக்கு சாதாரண ஒரு கொஸ்தாபிள் கூட விரையவில்லை. ஆனால் இதே ஒரு பௌத்த விகாரை உடைக்கப்பட்டிருப்பின் எஸ்டிஐஜி டிஐஜி ஓஐசி என பலதரப்பட்ட அதிகாரம் மிகுந்தவர்கள் விரைந்திருப்பார்கள் காரணம் தமது பதவி நிலை பறிபோய்விடும். இவ்வாறு நடுநிலையற்ற பொலிஸாரின் மத்தியிலேயே இங்கே வழிபாடுகளை அச்சத்திற்கு மத்தியில் முன்னெடுத்து வந்த நிலையில் இவ்வாறான சம்பவம் பதிவாகியிருக்கின்றது.
வசந்தே முதலிகேயிடம் இவ் திட்டமிட்ட பௌத்தமயமாகால் உட்பட பத்து கோரிக்கைகளை உள்ளடக்கியே நாம் வட்ஸ்அப்பினூடாக அனுப்பியிருந்தோம் எங்கோ இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாம் கோரிக்கைகளே முன்வைக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.
சிங்கள - பௌத்த மயமாக்குதல்
கடைசி வந்தும் வசந்த முதலிகே எமது கோரிக்கைகளுக்காக இணைந்து வரப்போவதில்லை என்பதனை அவரது இந்த பெல்ரி விடைகளை அளிப்பதன் மூலம் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு முடிந்தால் தெற்கில் இந்த திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு போராட்டத்தினை செய்துகாட்டுங்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்று வாருங்கள் இணைந்து போராடலாம்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனூடாக கிடைக்கும் நிதியிலேயே இந்தநாட்டின் படைத்தரப்புக்களுக்கு சம்பளங்களைக் கொடுத்து தொடர்ச்சியாக இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.
ஆக இவ்வாறாக நிதியினை
வழங்கும் சர்வதேச நாணய நிதியம் உட்படச் சர்வதேச நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் சபை
என அனைத்து தரப்புக்களும் இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமையைச்
சிந்தித்து உறுதிசெய்து எந்தவொரு நகர்வையும் முன்னெடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.