வெடுக்குநாறி மலையில் அழிக்கப்பட்ட விக்கிரகங்கள்: யாழில் சைவ அமைப்பினர் போராட்டம் (video)
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்று (27.03.2023) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டுள்ளது.
எதிர்ப்பு போராட்டம்
இந்த விடயம் குறித்து அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெடுக்குநாறி மலைஆதிசிவனை பிடுங்கி வீசியதை கண்டுப்பதோடு அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் உரிய இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மேலும் தெரிவிக்கையில், இந்துக்களின் புனித ஸ்தலங்கள் தொடர்ச்சியாக மத வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பில் காளி கோயிலை இடித்து மீன் சந்தை அமைப்பேன் என முஸ்லிம் அரசியல்வாதி கூறிய போது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
திருக்கேதீஸ்வர வளவை கிறிஸ்தவர்கள் உடைத்த நிலையில் அரசாங்கம் அதனை இன்னும் கட்டிக் கொடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அமைதியான சூழலை விரும்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பிடுங்கிய ஆதிசிவனை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.