உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்ததை அரசியலமைப்பு பேரவை, நிராகரித்துள்ளமை புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இது, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான முறுகலை புதிய மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது.
அரசியலமைப்பு பேரவையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் இந்த முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நிறைவேற்று ஜனாதிபதியின் இந்த யோசனையை அரசியல் அமைப்பு பேரவை நிராகரித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பு
அரசியலமைப்பு பேரவையின் ஒன்பது உறுப்பினர்களில் தம்மைத் தவிர ஐந்து பேர் உத்தேச நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் அவைத் தலைவர் என்ற ரீதியில் அதனைத் தொடர முடியாது எனவும் சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு பேரவை என்பது பத்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும், ஆனால் சிறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் இன்னும் நியமிக்கப்படாததால் தற்போது அதில் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.
சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவிகளின் அடிப்படையில் அதன் உறுப்பினர்களாக உள்ளனர். அத்துடன் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூன்று சிவில் சமூகத்தவர்களும் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தநிலையில் பேரவை உறுப்பினர்களிடையே சமன்பாடு ஏற்பட்டால் மட்டுமே நியமனங்களை அங்கீகரிக்க சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
இதேவேளை பிரதமர் தினேஸ் குணவர்தன, அவரது நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஜனாதிபதியின் நியமன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் மட்டுமே ஜனாதிபதியின் பரிந்துரைக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறிருக்க அரசியல் அமைப்பு பேரவையின் இந்த நிலைப்பாடு, மூன்று மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சேவையை நீடிப்பதிலும் தாக்கத்தை செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னகோனின் பதவியை 3 மாதக்காலத்துக்கு பின்னர் நீடிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் அவசியமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |