வரலாற்றுச் சாதனை படைத்த ருமேஷ் தரங்கவிற்கு ஜனாதிபதி வாழ்த்து
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இலங்கை விளையாட்டு வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இச்சாதனையானது முழு நாட்டிற்குமே பெருமிதம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகத் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதிவிட்டுள்ளார்.
ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வெல்லும் இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
வாழ்த்துச் செய்தி
சர்வதேச அரங்கில் வெற்றி பெறத் துடிக்கும் ருமேஷ் தரங்க மற்றும் பிற இலங்கை விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வானமே எல்லை, தொடர்ந்து முன்னேறிச் செல் ருமேஷ் – இந்த முழு நாடும் உனக்கு உறுதுணையாக நிற்கிறது!" என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானின் நகோயா நகரில் உள்ள 'மிகுஹோ பார்க்' தடகள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ருமேஷ் தரங்க தனது கடைசி முயற்சியில் 88.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
சாதனை
முன்னதாக, தனது 3வது முயற்சியில் 88.33 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்த அவர், இறுதி முயற்சியில் தனது சாதனையை மேலும் உயர்த்தினார்.
இந்தப் போட்டியில் இந்தியாவின் யஷ்வீர் சிங் (84.72 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் ரோஹித் யாதவ் (84.35 மீட்டர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுவேளை, இலங்கையின் சுமேத ரணசிங்க (78.08 மீட்டர்) இந்தப் போட்டியில் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை கைபற்றும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும், இப்போட்டித் தொடரில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஏற்கெனவே வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.