விடுதலைப் புலிகள் நாட்டிய தேக்குகள்: இன்று அவற்றின் நிலை என்ன..! நினைவை மீட்டும் மக்கள்
தனிநாட்டுக் கோரிக்கையோடு ஆயுத வழிப் போரில் இறங்கியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்கள் காலத்தில் செய்த சமூக நலன் சார்ந்த செயல்கள் பல இன்றும் நன்மையளிக்கின்றன.
அதனால் நன்மையடையும் மக்கள் அவ்வப்போது அவற்றை மீட்டிப் பார்க்க தவறுவதில்லை.
மீள் வனமாக்கல்
அத்தகைய செயல்களில் ஒன்று தான் மீள் வனமாக்கல் செயற்பாடு. வன்னியின் எல்லா காடுசார்ந்த வீதிகளிலும் தேக்கு, சஞ்சீவி, மலைவேம்பு, வேம்பு காடுகளை காணலாம்.
இது விடுதலைப் புலிகளின் முயற்சியாலனவை என்பது தெட்டத் தெளிவு. காடுகளை பாதுகாப்பதற்காகவும் காட்டு வளங்களை திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதற்காக வனவளப் பாதுகாப்பு பிரிவை உருவாக்கி திறமையான செயற்பாடுகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.
குற்றத்துக்கான தண்டனை
அளவுக்கு அதிகமான மது போதையினால் ஏற்படும் குழப்ப நிலைகளின் போது ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்காக விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட தண்டனை வித்தியாசமானது.
குடும்பங்களிலும் சரி பொது இடங்களிலும் சரி மதுபோதையில் ஒருவர் போடும் சண்டைகளிற்காக அத்தகைய தண்டனைகள் கிடைக்கும்.
கோபத்தால் ஏற்படும் முரண்பாடுகளினால் கூட இந்த தண்டனையை அனுபவித்தவர்கள் பலருண்டு. வீதியோர காடுகளை வெட்ட விடுவார்கள். அந்த நிலம் சுத்தமாக்கப்பட்ட பின்னர் மரக்கன்றுகள் நாட்டி வளர்க்கப்படும்.
அப்படி வளர்த்த தேக்குகள் தான் இந்த காடுகள் என ஒட்டுசுட்டான் - முள்ளியவளை வீதியில் உள்ள தேக்கங்காடுகளை (அந்த தேக்கங்காடுகள் தான் படத்தில் உள்ளன) நினைவு கூர்ந்தார் கூழா முறிப்பைச் சேர்ந்த வயதான ஒருவர்.
இந்த காடு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திற்கு அண்மையாக ஆரம்பித்து கூழாமுறிப்பு வழிப்பிள்ளையார் ஆலயம் வரை நீண்டு செல்கிறது. இடையிடையே சஞ்சீவி மற்றும் மலைவேம்பு போன்ற வேறு மரக்காடுகளும் உருவாக்கப்பட்டிருந்தன.
அனுமதியின்றி வெட்டியதால் தண்டனை
அனுமதியின்றி வெட்டப்படும் மரங்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் நடைமுறைப்படுத்திய தண்டனையில் இதுவும் ஒன்று. வழங்கப்படும் மரக்கன்றுகளை குறிப்பிடப்படும் இடங்களில் நட்டு துளிர்க்கும் வரை நீரூற்றி வளர்க்க வேண்டும்.
கன்றுகள் பட்டுப்போனால் (இறந்து) புதிய கன்றுகள் வழங்கப்படும். இந்த தண்டனையினால் மரங்களை வெட்டுவது வெகுவாக குறைந்ததாக கூறினார் இந்த தண்டனைக்குள்ளான ஒருவர். இந்த தண்டனை முறையை அவர் பாராட்டியும் கருத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.
காடுகளின் பராமரிப்பு
தற்போது வன்னியில் காடுகளின் அளவு வெகுவாக குறைந்து வருகின்றது. இயற்கை காடுகளும் சரி மீள்வனமாக்கல் காடுகளும் சரி. அபிவிருத்தி மற்றும் விவசாயச் செய்கைகளால் பெருமளவு காடுகள் காணாது போகின்றன.
பாதுகாக்கப்பட்ட வனங்கள் எல்லைப்படுத்தப்பட்ட போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்ங்களுக்காக முல்லைத்தீவு மாவட்ட மணலாற்றுப்பகுதி காடுகள் செல்லரிப்பது போல மெல்ல மெல்ல காணாது போவதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
மரக்கூட்டுத்தாபனத்தினரின் செயல்
தேக்கங்காடுகளை பராமரிப்பு தேவைக்காக இடைவெளியெடுத்தல் என்னும் செயலொழுக்கிற்கேற்ப குறிப்பிடத்தக்க தேக்குகள் மரக்கூட்டுத்தாபனத்தினரால் வெட்டப்பட்டுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
வெட்டப்படும் தேக்குகளை விற்பதனால் மரக்கூட்டுத்தாபனத்தினர் அதிகளவு இலாபமிட்டுகின்றனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். விடுதலைப் புலிகள் போன்று தேக்குகளை இவர்கள் பராமரிப்பதில்லை என மக்கள் சிலர் குறிப்பிட்டனர்.
விடுதலைப்புலிகள் தேக்குகளை நாட்டி வளர்த்த போது அவர்களின் பணியாளர்களாக பணிசெய்த அனுபவம் தமக்கிருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வானுயர்ந்த தேக்குகள்
விடுதலைப் புலிகள் நட்டு வளர்த்து விட்டுச் சென்ற தேக்கு உள்ளிட்ட எல்லா மரங்களும் நன்றே வளர்ந்து காட்சியளிக்கின்றன. இன்று வாழும் இலங்கையர் எல்லோருக்குமே அவை பயன்படுகின்றன.
சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர் என்ற வேறுபாடின்றி இந்த தேக்கங்காடுகளில் இருந்து பெறும் வெட்டுமரங்கள் பயன்படுகின்றன. விசுவமடு தேராவில் தேக்குகள், கேப்பாப்புலவு தேக்குகள், கூழாமுறிப்பு தேக்குகள் என்று பெருவளர்ச்சிக்குள்ளான சில தேக்கங்காடுகளை மக்களுடன் உரையாடும் போது நினைவு மீட்டினார்கள்.
2009க்கு முன்னர் விடுதலைப்புலிகளின் நிழல் அரசாங்கம் ஆச்சரியப்படுமளவுக்கு செயற்பட்டதை இன்றும் வியப்பாக எல்லோராலும் பேசப்படுவதை அவதானிக்கலாம்.
ஊழல் இல்லாத பொறுப்புணர்வோடு கூடிய நேர்த்தியான சேவைகளை வழங்கிய ஒரு அரசாங்க செயற்பாடாக அது இருந்தது.
எனினும் இன்றைய இலங்கையின் அரசாங்க இயந்திரம் மோசமான பொருளாதார கொள்கைகளோடும் கடன்
சுமை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் ஊழல் நிறைந்த தேசமாக இருப்பதோடு
ஒப்புநோக்கி பேசுவதையும் காண முடிகிறது.