ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம்
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து முடக்கிவிட்டது.
அவ்வாறு முடக்கியதன் மூலம் இனப்படுகொலை என்ற எதிரியையும் அது சம்பாதித்து விட்டது. அதனை எவ்வாறு தமிழர் தரப்பு தமக்கு நலன் பெயர்க்கக்கூடிய வகையில் அறுவடை செய்வது என்பது தமிழ் மக்களின் வல்லமை சார்ந்தும், தகவமை சார்ந்தும் நிர்ணயம் பெறும்.
இது இவ்வாறு இருக்கையில் ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு நடாத்தும் போதைப்பொருள் யுத்தம் பற்றி ஆய்வது அவசியமானது.
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடக்கியதனூடாக கட்டமைக்கப்பட்ட தமிழின படுகொலைக்கான கதவுகள் அகல திறக்கப்பட்டு விட்டது.
ஆயுதமுனையில் இனப்படுகொலை
அரசு என்பது பல முகங்களைக் கொண்ட அதிகார நிறுவனம். இந்த நிறுவனம் சட்டம் நீதி நிர்வாகம் ஆயுதப்படை என்ற கட்டமைப்புகள் மாத்திரமன்றி ஊடகங்கள், வங்கிகள், திணைக்களங்கள் என பல்வகை நிறுவனங்களை கொண்டு இயங்கும் ஒரு செயலாற்றல் மிக்க தாய் நிறுவனம்.
அந்தத் தாய் நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை தன்னுடைய விருப்புக்கு ஏற்றவாறு வளைத்தும், நிமித்தியும் தமிழினப் படுகொலையை வெற்றிகரமாகச் செய்வதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும்.

தற்போது சிங்கள பௌத்த அரசு என்கின்ற செயல் பூர்வமான அந்த நிறுவனம் ஆயுதமுனையில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையும் விட ஆயுதமற்று திட்டமிட்ட ரீதியில் தமிழினத்தின் பண்பாட்டையும், அதன் பண்பாட்டு விழுமியங்களையும், உள்ளார்ந்த சமூகத் திறனுக்கு மூளை சாலைகளையும், செயல் திறன்மிக்க அவ்வினத்தின் முன்னுதாரணமான முற்போக்கு சிந்தனை மூளையை அரித்து அழிப்பதுதான் தமிழினத்தை இல்லாத ஒழிப்பதற்கான இறுதிக்கட்ட மூலோபாயமாக கொண்டுள்ளது.
அமையும் அத்தகைய மூலபாயத்தைதான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு கையாள்கிறது.
ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து இப்போது போதைப்பொருள் ஒழிப்பு என அனுர அரசாங்கம் தனது பாதையை திருப்பி உள்ளது. அதே நேரத்தில் தம்மை இடதுசாரிகள் எனக் கூறிக்கொண்டு வலதுசாரிகளாக செயல்படுகிறது மட்டுமல்ல பௌத்த மகா சங்கத்திடமும் சரணடைந்துள்ளது.
சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து
இலங்கையில் இனவாதம் வேண்டாம், இனி ஒருபோதும் இன வாரத்துக்கு இடமில்லை என்றெல்லாம் இதே ஜேவிபினர் முழக்க முட்டனர். இப்போது தமிழர் தாயகத்தில் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதில் முழு வேகத்துடன் செயல்படுகிறது.
முக்கிய அமைச்சர்கள் இது பௌத்த நாடு இது புத்தரின் பூமி என்கிறார்கள்.

இந்தியாவில் பிறந்த புத்தருக்கு இலங்கை தீவு எப்படி கிடைத்திருக்கும்? என சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து கேள்வி கேட்கும் நிலை அநுர அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து பெருமெடுப்பிலாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் "எண்ணெச் செலவுதான் பிள்ளை வளர்ச்சி இல்லை" என்ற தமிழ் பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.
ஊழல் ஒழிப்பு என கிளம்பி அது தடம் புரண்ட நிலையில் இப்போது "போதைவஸ்து ஒழிப்பு என புறப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய இவர்களின் செயல் நடவடிக்கை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி ஆராய்வது அவசியமானது.
முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டத்தின் ஆயுத பலத்தை மாத்திரமே முடிவுக்கு கொண்டு வந்தது.
ஆயினும் ஆயுதப் போராட்டம் தந்த வலிகளில் இருந்து எழுந்து பலமான ஒரு ஜனநாயக முறைமை தழுவிய அரசியல் போராட்டத்தை தமிழ் மக்கள் நடத்தக்கூடாது என்பதற்காகவே தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பாவனை அரசினுடைய அனுசரணையுடன் முப்படைகளும் தமது முகவர்கள் மூலம் ஊக்கிவித்தனர்.
அவ்வாறு போதைப்பொருள் பாவனை வட - கிழக்கில் அதிகரித்து ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் குறிப்பாக பாடசாலை மட்டத்திலான இளம் தலைமுறையினது மூளைகளை அழிக்கவும், அவர்களை முடக்கவும், அடிமையாக்குவதற்காகவே போதைவஸ்து விநியோகம் அரச ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது.
போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு
“எதிரிக்கு மூட்டியது தீ எதிரியை சுடுவதிலும் விட உன்னையே அதிகம் சூடும்“ என்ற சீன பழமொழிக்கு இணங்க சிங்கள அரசால் தமிழர் தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்ட போதைவஸ்து விநியோகம் ஒரு கூட்டு விளைவை ஏற்படுத்தியது.
அது வட-கிழக்கை தாண்டி தென்னிலங்கை நோக்கி மிக வேகமாக பரவத் தொடங்கியது.
அரச முகவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, கடத்தல் என்பன சிங்கள தேசத்தில் மிக வேகமாக அதிகரித்து சிங்கள தேசத்தின் இளைய தலைமுறையை சீரழிக்க தொடங்கியது.

இந்தப் பின்னணியில் சிங்கள தேசத்தை பாதுகாப்பதற்கு அதற்கு வழங்கலாக இருக்கக்கூடிய வடக்கின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இத்தனை விற்பனையாளர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதன் நிமித்தமே வட பகுதியில் போதைப் பொருள் விற்பனையாளர்களும், கடத்தல் காரர்களும் கைது செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு இலங்கை அரசை தள்ளியுள்ளது.
யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த 16 ஆண்டுகளும் வடபகுதியில் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாகவும், சமூக சீர்கேடுகளின் மூலகர்த்தாக்களாவும் மாற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டத்தை இளைஞர்கள் நினைத்தும் பார்க்கக்கூடாது.
இதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு தென் இலங்கையை தாக்குகின்ற போது அதனை தடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்த அடிப்படையில்தான் கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் வடகிழக்கில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவது என்பது தென்னிலங்கை நோக்கிய கஞ்சா வியாபாரிகள் மாத்திரமே கைது செய்யப்படுகிறார்கள்.
ஆனால் தமிழர் தாயகத்தின் கஞ்சா வியாபாரிகள் யாரும் இங்கே முடக்கப்படவுமில்லை கைது செய்யப்படவுமில்லை என்பதிலிருந்து இலங்கை அரசனுடைய போதைப்பொருள் ஊக்குவிப்பை உணர முடியும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 15 December, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.