பருத்தித்துறை சாலை போக்குவரத்து விவகாரம் - அடுத்தடுத்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்த 3 உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச சபையில் தவிசாளருக்கும், உறுப்பினர் ஒருவருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டில் உறுப்பினர் சபையில் இருந்து இடையில் வெளிநடப்பு செய்துள்ளார்.
நேற்றைய தினம்(25.06.2026) இடம்பெற்ற கூட்டத்தில், பருத்தித்துறை சாலையின் போக்குவரத்து தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின் போதே இவ்வாறு வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சபை நடுவில் வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பேருந்துகள் காலை மற்றும் மாலை சேவைகளை மக்கள் குடியிருப்புக்கள் ஊடக மருதங்கேணியிலிருந்து வத்திராயன், உடுதுறை, ஆழியவளை ஊடாகவும் கேவிலிலிருந்து ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன் ஊடக மருதங்கேணியை வந்தடைந்து பருத்தித்துறை கேவில் வரையும், கேவில் பருத்தித்துறை வரையும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன.

ஏற்கனவே பருத்தித்துறை கேவில், கேவில் - பருத்தித்துறை போக்குவரத்தும், யாழ்ப்பாணம் - கேவில், யாழ்ப்பாணம் - கேவில் சேவை என்பனவும், தனியார் சேவைகளான பருத்தித்துறை - கேவில், யாழ்ப்பாணம் - கேவில் சேவைகளும் கடற்கரை வீதியால் இடம்பெற்று வருகின்றன.
பேருந்து சேவையால் எழுந்த சர்ச்சை
இந்நிலையில், அண்மையிலிருந்து குடியிருப்பு வீதி ஊடாக இடம்பெறும் சேவை பருத்தித்துறை பிரதேச சபைக்கு சொந்தமான வீதியால் பிரதேச சபை அனுமதி இன்றி செல்வதாக கூறியும், பேருந்து போக்குவரத்திற்கு பொருத்தமற்ற வீதி என்றும், குறித்த சபை வீதியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தவிசாளர் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கணைச்செல்வன் குறித்த சபைக்கு சொந்தமான குடியிருப்பு வீதியால் பேருந்து சேவை இடம்பெற அனுமதிக்க வேண்டும் என்று கொண்டுவந்த பிரேரணையால் வாக்குவாதம் கிளம்பியுள்ளது.
இதன்போது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர், கடும் வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
தவிசாளரின் பணிப்புரையை மீறிய உறுப்பினர்கள்
இதனைத் தொடர்ந்து தவிசாளர் குறித்த உறுப்பினரை சபையிலிருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். ஆனாலும், தான் வெளியேறப்போவதில்லை என குறித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீண்டும் வடமராட்சி கிழக்கு பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அதன் பின்னர் தவிசாளர், “ உங்களை நான் ஏற்கனவே சபையில் இருந்து வெளியேறுமாறு குறிப்பிட்டிருந்தேன். எனவே நீங்கள் இனி இங்கு பேச முடியாது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர், எனக்கு சரியான பதில் இல்லாத சபையில் இருக்க முடியாது என தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
அவரை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மூவர் அடுத்தடுத்து சபையில் வெளியேறியுள்ளனர். இவர்கள் வெளியேறிய பின்னரும், கூட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.