சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்றும் (02) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு வைத்தியசாலை தாதியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நோயளர்கள் பாதிப்பு
தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக, வைத்தியசாலை நோக்கி வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தூர பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த முதியவர்கள், தாய்மார்கள், உள்ளிட்ட பலரும் வைத்தியசாலைக்கு வந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலை
வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம், தாதியர்கள் ஆர்ப்பாட்டம், சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், தாதியர்கள் ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாக மாறி மாறி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதன் காரணமாக வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாதாந்த கிளினிக் பரிசோதனைகளிற்கு வருபவர்கள் தமது நாளாந்தம் பயன்படுத்த
வேண்டிய நோய்களுக்கான மருந்து வில்லைகளை பெற முடியாத நிலையில் பெரிதும்
சிரமப்படுவதாகவும், அதிக விலை கொடுத்து தனியார் மருந்தகத்தில் பெறவேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு பெற்று
வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவதும், மீண்டும் சிகிச்சை பெறாமல்
திரும்பிச் செல்வதுமாக தொடர்கிறது.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமக்கான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி-எரிமலை
வவுனியா வைத்தியசாலை
இரண்டாவது நாளாக தொடரும் சுகாதார தொழிற்சங்கப் போராட்டத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வவுனியாவில் கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றுக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், பலர் சிகிச்சை பெற முடியாது ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதையும், தனியார் மருத்துவ நிலையங்களை நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கிராமப் புறங்களில் இருந்து வரும் நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாது ஏமாற்றதுடன் வீடு திரும்புவதுடன், சிகிச்சை பெறாது தொடர்ந்தும் நோய் தாக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
செய்தி- திலீபன்
திருகோணமலை பொது வைத்தியசாலை
திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதால் குறித்த வைத்தியசாலையின் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் அதிகரிப்பு, ஊழியர் பற்றாக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல் மற்றும் வாழ்வாதாரத்தினை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (02.02.2024) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் தூர இடங்களில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் மிகவும் அவதியுற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி-பதுர்தீன் சியானா