அலையில் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர் மீட்பு - இருவர் மாயம்
அம்பாறை, நிந்தவூர் கடற்கரையில் நேற்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ள மற்றைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மதியம் நிந்தவூர் கடற்கரையில் நீராடச் சென்றிருந்தவர்களில் நிலாம் அப்துல்லா ஆபித் (வயது 17) என்பவர் உயிருடன் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவரையும் தேடும் பணிகள்
இதேவேளை, அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ள ஏனைய இருவரும் முகமது அன்வர் ஆத்திப்(18 வயது) நௌவ்சாத் ஹபுனத் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மீட்புக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது கடலின் நீரோட்டம் அக்கரைப்பற்று திசையை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுவதால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் உள்ளிட்ட தென்கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கடற்றொழிலாளர்கள், கடலுக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




