பிள்ளையானின் பிணை மனு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்குது.
அன்றைய தினம் இந்தப் பிணைக் கோரிக்கை தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு தெரிவித்து சட்டமா அதிபருக்கு அறிவிப்பு அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டது.
தமது கட்சிக்காரர் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதாக, பிள்ளையான் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர த சில்வா நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கான அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, தமது கட்சிக்காரரைப் பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் திருத்தப்பட வேண்டியவை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, உரிய திருத்தங்களை மேற்கொண்டு திருத்தப்பட்ட மனுவொன்றைத் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு இணக்கம் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
கோடீஸ்வரராக வேண்டியவர்... ரிஷி சுனக்குடன் பணியாற்ற Anthropic பங்குகளை விற்றுவிட்ட பிரித்தானியர் News Lankasri