கொங்கோவில் எபோலா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 8,000 ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பிந்திய அறிக்கையின்படி, இதுவரை 8,067 எபோலா நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,901 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்புக்கள்
'புண்டிக்புக்கியோ' வகை வைரஸினால் பரவி வரும் இந்த எபோலா நோய்த்தொற்றானது, கொங்கோ நாட்டின் வரலாற்றில் பதிவான மிக மோசமான மற்றும் அதிகளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றாக மாறியுள்ளது.

இதற்கு முன்னர் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பதிவான எபோலா பரவலை விடவும் தற்போதைய சூழல் தீவிரமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில், கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 28,600 க்கும் மேற்பட்டோரையும் 11,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய எபோலா பரவலுக்கு அடுத்தபடியாக, கொங்கோவில் நிலவும் தற்போதைய பரவலே உலகின் இரண்டாவது பெரிய எபோலா அச்சுறுத்தலாகப் பதிவாகியுள்ளது.