சிறுவர்களை தவறாக வழிநடத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! எதிரணி விசனம்
'நாட்டின் சொத்துக்களான சிறுவர்களை தவறாக வழிநடத்துவதற்கான சூழலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க 16 வயது பூர்த்தியடைந்த சிறுவர்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட முடியும் என நாடாளுமன்றத்தில் கூறுகின்றார்.
சபை முதல்வரின் கருத்து
இந்நாட்டில் சிகரட் கொள்வனவு செய்வதற்கு 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது சட்டமாகும். இவ்வாறான நாட்டில் 16 வயதுடையயோருக்கு இதுபோன்ற சுதந்திரம் வழங்கப்பட்டால் 2500 ஆண்டுகள் பழமையான பௌத்த தேரவாதத்தை பின்பற்றும் தாய்நாட்டின் ஒழுக்கத்துக்கு என்னவாகும்.
பௌத்தம் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மதங்களும் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒழுக்கத்தை சீரழிக்கும் வகையிலேயே சபை முதல்வரின் கருத்து அமைந்துள்ளது.
16 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்தால் அந்த சிறுமிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கும் பதில் என்ன.
எயிட்ஸ் நோயாளர்கள்
கடந்த வாரத்தில் இருவேறு பிரதேசங்களில் பிறந்த சிசுக்கள் வீதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இவ்வாறான திருமணத்துக்கு முன்னதான பாலியல் உறவுகளால் எயிட்ஸ் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
சுமார் 20 வயதுடைய இளைஞர், யுவதிகள் மத்தியிலேயே இந்நோய் அதிகளவாகக் காணப்படுவதாகவும், அதிக நோயாளர்கள் அநுராதபுரம் மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க தன்பாலீர்ப்பினரை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறை மேம்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதற்கும், தாய்லாந்து செல்வதற்குமான நோக்கங்கள் வேறாகும்.
எதிரணி விசனம்
அரசாங்கம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் தான் இதனை அனுமதிக்கவில்லை எனக் கூறினாலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் இது குறித்த கடிதத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குறித்த கடிதம் இன்றுவரை மீளப் பெறப்படவும் இல்லை. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் கூட ட்ரம்ப் இதை அனுமதிக்க விரும்பாத போது, எம்மைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடு எவ்வாறு அதனை அங்கீகரிக்க முடியும்.
இளைஞர்களின் வாக்குகளை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
மகாசங்கத்தினரும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் ஆழமாக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
