மாணவர்களிடம் மறைமுகமாக வசூலிக்கப்படும் நிதிகள்.. வடக்கு ஆளுநர் வெளியிட்ட தகவல்
பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளபோதும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், நேற்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், "இலங்கையிலேயே 5 மாவட்டங்களைக் கொண்ட ஒரே மாகாண சபை இதுவாகும். யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன. அங்குள்ள மாணவர்கள் அந்தந்தக் கிராமப் பாடசாலைகளையே முழுமையாக நம்பியுள்ளனர்.
பிரதமரின் அறிவிப்பு
இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளான நீங்கள், அலுவலகங்களுக்குள் முடங்கி இருக்காது, அடிக்கடி களத்தரிசிப்பு மேற்கொள்ள வேண்டும்.

பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகளை நேரில் கண்டு, எமது நிதி ஒதுக்கீடுகள் ஊடாக அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமை காரணமாக எந்தவொரு மாணவனும் கல்வியை இடைநிறுத்தும் நிலை ஏற்படக்கூடாது.
அமைச்சின் சுற்றறிக்கையையும் மீறி, பாடசாலை நிர்வாகங்கள் நிதி அறவீட்டுக்கு புதிய வழிகளைக் கையாள்கின்றன. பெற்றோரின் பெயரிலோ, பழைய மாணவர் சங்கங்களின் பெயரிலோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ நிதிகள் பெறப்படுகின்றன. யாழ்ப்பாண நகரப் பாடசாலைகள் சிலவற்றில் கூட பெற்றோரிடம் பணம் கோரப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன.
பிரதமரே 'பெற்றோரிடம் பணம் அறவிட வேண்டாம், திறன்பலகைகள் வழங்கப்படும்' எனக் கூறியுள்ள நிலையில், இச்செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. இவ்வாறு பெறப்படும் நிதிகளுக்கு உரிய கணக்கறிக்கைகளோ, வெளிப்படைத்தன்மையோ இல்லை.
நன்கொடையாகப் பெறப்படும் பொருட்கள் பாடசாலை இருப்புப் பதிவேட்டில் பதியப்படுவதில்லை. களத் தரிசிப்புக்களின் போது இவற்றைக் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.





