ஐக்கிய மக்கள் சக்தியில் ஆதிக்கம் செலுத்தும் குற்றக்கும்பல்: விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் பெருமளவிலான உறுப்பினர்கள் திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவினருடன் தொடர்புகளை வைத்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகர, அம்பலாங்கொடை நகர சபையின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஹிரான் கோசல மற்றும் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் சரித் அபேசிங்க ஆகியோர் குறித்த குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி உரையாடலில் வெளிவந்துள்ள தகவல்கள்
போகம்பரை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசியை பரிசோதித்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் 53 தடவைகள் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலாஞ்சலி பிரேமதாச, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பெருமளவிலான போலி நோட்டுகளுடன் கைது செய்யப்பட்ட போதிலும், அவருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டார்.

வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் 6 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி மற்றொரு பாதாள உலகக் குழுவினால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அம்பலாங்கொடை நகர சபை வேட்பாளராக இருந்த ஹிரான் கோசல இரு கொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி மற்றொரு பாதாள உலகக் குழுவினால் படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாறாக, அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் பலர் திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுடன் பேணிய தொடர்புகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.