மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைகளை ஏற்றால் விரைவில் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்த அதிகாரி மேலும் குறிப்பிடுகையில், "மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எப்போதும் தயாராகவே இருக்கின்றது.எனினும், நாடாளுமன்றம் அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டியுள்ளது.
புதிய தேர்தல் முறைமை
புதிய தேர்தல் முறைமை என்பது, உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் போன்று தொகுதி, விகிதாசார முறைமையிலான கலப்பு தேர்தல் முறையாக இருக்கும்.
எனினும், அந்தத் தேர்தல் முறைமைக்கு எல்லை நிர்ணயம் செய்வதே தடையாக இருக்கின்றது. புதிய தேர்தல் முறைமைக்கு எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் அது நல்லாட்சி அரசின் காலத்தில் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், அது மீளாய்வு செய்யப்பட்ட போதிலும் மீண்டும் நிராகரிக்கப்பட்டமையால் புதிய தேர்தல் முறைமை இதுவரை சாத்தியமற்ற ஒன்றாக இருக்கின்றது.
மாகாண சபைத் தேர்தல்
எனவே, அரசு புதிய தேர்தல் முறைமையில் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முற்பட்டால் அதற்கு நீண்ட காலம் செல்லும். அவ்வாறு இல்லாது, தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமாயின், பழைய எல்லை நிர்ணயத்தை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த முடியும்.
இதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டால், மாகாண சபைகள் தேர்தலை நாளையேனும் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



