இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசுக்கு வித்திடும் நெதன்யாகுவின் அரசியல் நகர்வு
இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, தனது முக்கிய அரசியல் போட்டியாளரான காடி ஐசன்கோட்டைச் சந்தித்துள்ளதாகவும், இருவரும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கின் பாதுகாப்பு நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேலின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான அரசியல் நகர்வாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகின்றது.
முன்னதாக, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதமர் பதவியைச் சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ள நெதன்யாகு முன்மொழிந்துள்ளார். இதற்கமைய, புதிய அரசாங்கத்தின் ஆரம்பகட்டத்தில் காடி ஐசன்கோட் முதலில் பிரதமராகப் பதவி வகிக்கலாம் என்றும், தாம் மாற்றுப் பிரதமராகச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கூட்டு முயற்சியில் ஆட்சிக்கு வரும் புதிய அரசு
நாடாளுமன்றத்தில் தனது லிகுட் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்தச் சமரசத்திற்கு முன்வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகுவின் முன்மொழிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐசன்கோட்,
“உண்மையான ஒற்றுமைக்கு லிகுட் கட்சி தயாராக இருந்தால், அடுத்த 24 மணித்தியாலங்களில் அதன் தீவிரத்தன்மையைப் பரிசோதிக்க நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். எனினும், நெத்தன்யாகு உண்மையாகவே அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாரா அல்லது காலத்தைக் கடத்த முயற்சிக்கிறாரா என்பது குறித்து எதிர்க்கட்சியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு அணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு 53 ஆசனங்கள் கிடைதுள்ளன.
அதே போன்று, ஐசன்கோட்டின் அணியும் அதன் எதிர்பார்க்கப்படும் கூட்டாளிகளும் 48 ஆசனங்களை வென்றுள்ளன.
120 ஆசனங்களில் 61 ஆசனங்களுக்கான தேவை
இப்படி இருக்கையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் மொத்த ஆசனங்கள் 12ஆக பார்க்கப்படுகின்றன. அதில், தற்போது ஆட்சியமைப்பதற்கு குறைந்தது 61 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
இந்த நிலையில்,நெதன்யாகுவுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கும் யோசனையை ஜனநாயகக் கட்சித் தலைவர் யாயிர் கோலான் நிராகரித்துள்ளார். நெதன்யாகு தோல்வியடைந்து விட்டதாகவும், மாற்றத்திற்கான அரசாங்கத்தை அமைப்பதே தங்களின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரபுக் கட்சிகளின் கூட்டணியான கூட்டுப் பட்டியலின் தலைவர் யூசுப் ஜபரீனும் நெதன்யாகுவின் முயற்சியை விமர்சித்துள்ளார்.
ஐசன்கோட் டிசம்பர் 6ஆம் திகதிக்குள் புதிய அரசாங்கத்தை அமைப்பதாக உறுதியளித்துள்ளார். அதற்காக வழங்கப்படக்கூடிய மேலதிக 14 நாட்கள் கால அவகாசத்தையும் பயன்படுத்தப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.