பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கார்த்திகை 27ஆம் திகதியின் முக்கிய சம்பவம்..!
கார்த்திகை 27ஆம் திகதி இலங்கையின் பல இடங்களிலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டித்துக் கொண்டிருந்த வேளையில், பிரான்சில் ராஜபக்சர்களைத் தவறாகச் சித்தரித்து நடத்தப்பட்ட நாடகம் தமிழ் இனத்துக்கு எதிரான செயல் என சமூக அரசியல் செயற்பாட்டாளர் வைத்தியர் உதயசீலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கார்த்திகை 27ஆம் திகதி துயிலும் இல்லங்களில் சிலர் அழுது தமது துயரத்தை வெளிப்படுத்தும் தாய்மார்கள் மற்றும் உறவினர்களைத் தொலைபேசியில் காணொளி எடுப்பதை அவதானிக்க முடிந்தது.
இப்படியான செயல் மக்களின் வளர்ச்சியைக் காட்டினாலும், மனிதாபிமானமற்ற செயலாகவே பார்க்கப்படுகின்றது. வெறும் பணத்திற்காக மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
அதேபோன்று, தமிழ் இனத்திற்கே தீங்கு விளைவிக்கும் வகையில் மேடை நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. இப்படியான விடயங்கள், செம்மணி போன்ற விடை கிடைக்காத பல விடயங்கள் தொடர்பான சர்வதேசப் பார்வைக்கு இடையூறாக மாறிவிடும் என்பதையும் ஏன் யாரும் நினைவில் கொள்வதில்லை.
இப்படியான விடயங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இருந்திருந்தாலும் அனுமதித்திருக்க மாட்டார். அவர்கள் மோசமாக நடந்துகொள்ளும்போதும் அறத்தின் வழியில் பயணிப்பதே தமிழர்களின் பண்பாடாகப் பார்க்கப்படுகின்றது என்றார்.