வேலைநிறுத்தத்தை எதிர்கொள்ளத் தயாராகும் அரசு! ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அதிரடி உத்தரவு
கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் நாளை(30.11.2026) முதல் நாடு முழுவதும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியில், சேவைகள் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அரசாங்கம் பொது நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது சம்பளங்களையோ கொடுப்பனவுகளையோ அதிகரிக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை எனவும், அவ்வாறான அதிகரிப்புகள் அடுத்த வரவு செலவுத் திட்டத்திலேயே பரிசீலிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியாழக்கிழமை அறிவித்தார்.
"இந்த அரசாங்கத்திடம் கூச்சலிடுவதன் மூலம் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குரல் எழுப்புவதற்கு முன்னரே நாங்கள் வழங்குவோம்," என அரசாங்கத்திற்கு ஆதரவான தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் உரையாற்றுகையில் அவர் கூறினார்.
இதற்கிடையில், திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு கோரும் முயற்சியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்திக்கக் கோரிக்கை விடுத்திருந்த "அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்துடனும்" இவ்வாறான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இரண்டு வாரங்களுக்குள் அதற்கான நேரம் ஒதுக்கப்படும் என அந்தச் சங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.