வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு! அரச ஊழியர்கள் - ஆசிரியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் நீண்டகாலமாக நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (30.11.2026) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அரச மற்றும் மாகாண அரச சேவை ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்தில் இணையவுள்ளனர்.
இடைக்காலக் கொடுப்பனவு
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனைக் கண்டித்தே ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் இந்த நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
குறிப்பாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வரவு - செலவுத் திட்டத்தில் உரிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
எதிர்வரும் முதலாம் திகதி கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதரவு வழங்க தீர்மானம்
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் நாளைய தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தமது ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ள நிலையில், வைத்தியசாலை செயற்பாடுகள் மற்றும் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் உட்பட அரச நிறுவனங்களின் அன்றாடப் பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனினும், இலங்கை கணக்காளர் சேவை சங்கம் உள்ளிட்ட ஒருசில தொழிற்சங்கங்கள் நாளைய போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்குப் பின்னரும், வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் திருத்தங்களை மேற்கொண்டு தமது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உரிய தீர்வை வழங்கத் தவறினால், எதிர்வரும் நாள்களில் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனத் தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.