நாளை பாடசாலைகள் இயங்குமா..! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாளை, 2026 நவம்பர் 30ஆம் திகதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (29) ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், பாடசாலைகளில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள் மற்றும் ஏனைய கல்வி, புறக்கல்வி நடவடிக்கைகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி வாரம்
2026ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
எனவே, நவம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகும் வாரம் மூன்றாம் தவணையின் இறுதி வாரமாகும். சில பாடசாலைகளில் வருட இறுதிப் பரீட்சைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், ஏனைய பாடசாலைகளில் புறக்கல்வி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதனால், அவற்றில் எந்தவித இடையூறும் அல்லது மாற்றமும் செய்யப்படக் கூடாது என அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 197 நாட்களிலிருந்து 186 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டிட்வா (Ditwah) நிலைமை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டமை உள்ளிட்ட விசேட சூழ்நிலைகளே இதற்குக் காரணமாகும். இதனால் மேலும் பாடசாலை நாட்களைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணப் பாடசாலைகள்
வடக்கு மாகாணப் பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட்கிழமை நடைபெறும் என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
நாளை வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நடைபெறமாட்டாது எனவும், பரீட்சைகள் நடைபெறமாட்டாது எனவும் இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவி வரும் வதந்திகள் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கக்கூடிய அதிகாரமுள்ள தரப்பினரிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
எனவே, வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் நாளை (30.11.2026) திட்டமிட்டபடி பாடசாலைச் செயற்பாடுகளும், ஒழுங்கமைக்கப்பட்டவாறு பரீட்சைகளும் நடைபெறும்.
மேலும், இந்த ஆண்டுக்குரிய சகல கல்விச் செயற்பாடுகளும் உரிய காலத்தினுள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில், கல்வி அமைச்சின் செயலாளரால் கடந்த 23.11.2026ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சகல பாடசாலைகளும் தொடர்ந்து இயங்கும்.
இதற்கமைய, நாளை வழமைபோல் பாடசாலைகளும் பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறுவதால், சகல அதிபர்களும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஸ்