திருகோணமலையில் திடீரென இடிந்து விழுந்த பாடசாலை கட்டடம்
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து, திருகோணமலை - மூதூர் மத்திய கல்லூரியின் பிரதான வகுப்பறை கட்டடம் ஒன்று நேற்று (25.12.2025) திடீரென இடிந்து விழுந்துள்ளது.
குறித்த விபத்து பாடசாலை விடுமுறை தினத்தில் நேர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
அதிகாரிகளின் அலட்சியம்
இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த தினங்களுக்கு முன்னர், டித்வா புயலால் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மூதூர் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, மூதூர் மத்திய கல்லூரியின் 60 ஆண்டு கால பழமை வாய்ந்த 12 வகுப்பறைகளை கொண்ட கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று(25) சரிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது.
இந்த பாடசாலையில் நான்கு கட்டடங்கள் 60 வருடங்கள் பழமையானது. அதில் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி, கடந்த ஜூன் மாதம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் மக்கள் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
உடனடி தீர்வு வேண்டும்
இதன்போது ஏனைய கட்டடங்கள் பாதுகாப்பானவை என சான்றிதழ் வழங்கிய கல்வி அதிகாரிகளின் கூற்றை பொய்யாக்கும் வகையில் நேற்றைய விபத்து அரங்கேறியுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளர் வை. எம். சியாம் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "மாகாண கல்வித்திணைக்களத்திடம் முறையிட்டால், இது மத்திய அரசுக்கு சொந்தமான பாடசாலை என்கிறார்கள்.
12 வகுப்பறை மாணவர்கள் இப்போது மர நிழலில் பாடம் படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உடனடியாக தீர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, எஞ்சியுள்ள பழைய கட்டிடங்களும் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.
அதிகாரிகள் பொறுப்புத்துறப்பு செய்வதை விடுத்து, மாணவர்களின் உயிர் பாதுகாப்பை கருதி புதிய கட்டடங்களை அமைத்து தர வேண்டும் என்றும் மக்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.




திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam