றீமால் சூறாவளி நகர்ந்த போதிலும் தொடரும் பருவமழை
றீமால் சூறாவளியானது பங்களாதேஷை நோக்கி நகர்ந்த போதிலும், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள வளிமண்டலவியல் நிபுணர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாத்திரம் 4 எச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது என்றும், காற்று, மழை நிலை, கடல் பகுதிகளில் காற்று அதிகரிக்கும் எச்சரிக்கை, அரபி வங்கக் கடல் பகுதியில் காற்று அதிகரிக்கும் என 4 எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மழையுடனான காலநிலை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
றீமால் சூறாவளி மற்றும் தென்மேற்கு பருவமழை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டதால் நாட்டை பாதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாவில் உருவான றீமால் சூறாவளியினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா மற்றும் பங்களதேஷின் தென் பகுதிகளைச் சேர்ந்த 16 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
றீமால் சூறாவளியானது, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதை அடுத்து, கடும் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூறாவளி கரையை கடக்கும் சந்தர்ப்பத்தில், சுமார் ஒரு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூறாவளி பயணித்த பாதையில் 3.6 மில்லியன் குழந்தைகள் அடங்களாக 8.4 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
பங்களதேஷில் இந்த சூறாவளியினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டே பங்களதேஷ் மக்கள் உயிரிழந்துள்ளதாக பங்களாதேஷின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மொஹிப்பூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்காள அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |