அரசின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் திரண்ட எதிர்க்கட்சியினர்
அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்று அரசுக்கு எதிரான தமது பலமான எதிர்ப்பைக் காட்டினர்.
மாபெரும் போராட்டம்
போராட்டத்தின் நடுவே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் நாடா ளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிக்கு இறங்கியுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "22ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார மோகத்துடன் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, நாட்டின் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து நீதித்துறையை நாசப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இத்தகைய தனிக்கட்சி ஆட்சி முறைமையை ஜனநாயக வழியில் தோற்கடிக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம். நாட்டில் வறுமை அதிகரித்து, பொருள்களின் விலைகள் கூடி, வேலையின்மையும் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.

தலைநகரின் முக்கிய போக்குவரத்து மையமான கோட்டை ரயில் நிலையச் சந்தியை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அரசமைப்பைத் துஷ்பிரயோகம் செய்யும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
மிகக் கச்சிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் அந்தப் பகுதியைச் ஸ்தம்பிக்க வைத்தது. எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி நகர்வு அரசுக்குப் பாரிய அரசியல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.






