தென்னிலங்கையில் மீண்டும் மகிந்த நாமம்!! விஜேராம இல்லத்தில் அவரைப் பார்த்து கதறி அழுதப் பெண்கள்
சுமந்திரனின் கடையடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக மகிந்த ராஜபக்சவின் நாமம் தனி சிங்கள பகுதிகளில் மேலெழும்ப ஆரம்பித்துள்ளதோடு யுத்த வெற்றியின் நாயகன் என்றெல்லாம் பேசு பொருளாக்கப்பட்டுள்ளதாக நடுநிலை வகிக்கும் சிங்கள புத்திஜீகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை முதல் மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு அவரை சந்திக்க தேரர்கள் மற்றும் சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் உறுப்பினர்கள் சென்று வருவது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
மீண்டும் ராஜபக்சக்கள்
இவ்வாறான பதிவுகளால் சிங்கள சமூகத்தில் பிற்போக்கான சிந்தனையாளர்களின் பல்வேறான பேச்சுக்கள் இனத்துக்கிடையிலான சில சலசலப்புக்களை ஏற்படுத்துமா என்ற அச்சம் சூழ்ந்துள்ளதாக நடுநிலை வகிக்கும் சிங்கள புத்திஜீகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று அநுராதபுரத்தில் இருந்து இரண்டு மூன்று பேருந்துகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பார்ப்பதற்காக பரிசுப் பொருட்கள் மற்றும் உணவு பண்டங்களுடன் பலர் வருகை தந்திருந்தனர். இக் காட்சிகள் தென்னிலங்கை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒளி-ஒலி பரப்பும் செய்யப்பட்டன.
இவ்வாறான செயற்பாடுகள், ராஜபக்சக்கள் மீது தற்போது பெருமளவிலான மக்களுக்கு இருக்கும் வெறுப்பான மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், நேற்றைய இந்த சந்திப்பின் போது, மகிந்தவைப் பார்க்க வந்த மக்களின் முன்னிலையில், ராஜபக்சக்களின் தீவிர விசுவாசியான திஸ்ஸ குட்டியாராச்சி பேசும்போது, “நாம் இன்னும் துட்டகைமுனு மன்னனை ஏன் மறக்காமல் இருக்கின்றோம். அவர் யுத்தம் செய்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதனால் தானே, அதேபோலதான் மகிந்தவும், பிரிவினைவாத போரை முடிவுக்குக் கொண்டு வந்த மக்களை காப்பாற்றியதால் அவரும் அரசர் தான்” என்று வந்திருந்த மக்களை ஆவேசப்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார்.
அத்தோடு மகிந்த, லொஹான் ரத்வத்தையின் இறுதி கிரியைக்கு சென்றிருந்த போது சில பெண்கள் அவரின் காலை பிடித்து கொண்டு கதறி அழும் காணொளியும் சமூக ஊடகங்களில் காணக்கிடைத்தது.
ஆனால் இதேபோன்றதொரு சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த தோற்றபோதும் இடம்பெற்றது. அப்போதும் பெருமளவிலான மக்கள் கதறி அழுதனர். ஆனால், அங்கு அழுத பெண்கள் அனைவரும் கண்டியில் இருந்து பணம் கொடுத்து அழுவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், அது ஒரு நாடகம் என்றும் சிங்கள ஊடகங்கள் விபரித்திருந்தன.
இந்த நிலையில், தற்போது வடக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து நேற்றையதினம் கடையடைப்பு போராட்ம் செய்து முடிக்கப்பட்டது.
நாட்டைக் காப்பாற்ற அரும்பாடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக ஒரு சமூகம் வேலை செய்து கொண்டிருக்கின்றது என்ற அடிப்படையில் இந்த கடையடைப்பு போராட்டத்தைக் காரணம் காட்டி, நாட்டை மீண்டும் காப்பாற்ற மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் தேவை என்ற அடிப்படையில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் ஒரு அங்கமாகவே, பெரும்பான்மை மக்களை, பௌத்த பிக்குகளின் தலைமையில் ஒன்று திரட்டி மகிந்தவின் வீட்டிற்கு சில அரசியல்வாதிகள் அழைத்துச் சென்ற இந்த சம்பவம் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களை ஒன்று திரட்டி இராணுவத்திற்கு எதிரான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு சிந்தனையை உருவாக்கி அவற்றை முறியடிக்க தென்னிலங்கையில் இருக்கும் ஒரே தலைவர் மகிந்தவும் அவரின் கும்பத்தினர் மட்டுமே உள்ளனர் என்ற சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த சிலர் முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனென்றால் ராஜபக்சக்களின் கொட்டம் அடக்கப்பட்டு விட்டதாகவே நடுநிலையான மக்கள் நம்பிக்கை கொண்டனர். அந்த நம்பிக்கையை தகர்க்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சுமந்திரனின் இந்த கடையடைப்பு வாய்ப்பாகிவிட்டது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா



