மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும்
ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளுக்காக போராட ஒருபோதும் தயங்கியதில்லை. சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராக கடந்த 76 ஆண்டுகளில் அவ்வக் காலங்களில் யார் யார் தலைமை தாங்கினார்களோ, யாரெல்லாம் சிங்கள அரசுக்கு எதிராக போராட எழுந்து வந்தார்களோ அவர்களுக்கு பின்னே அணிவகுத்தார்கள்.
தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை அடைய யார் சிங்கள அரசுக்கு எதிராக நிற்கிறார்களோ அவர்களுடன் இணைந்து போராடத் தயங்கவில்லை. இத்தகைய தமிழர்களை சரியாக வழிநடத்தி அர்த்தபுஷ்டியுள்ள வடிவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
மாறாக எந்த முன்யோசனையும் இன்றி சோம்பேறித்தனத்தின் உச்சத்தில் நின்று கதவடைப்பு போராட்டத்திற்கு இப்போதும் தமிழ் மக்களை அழைப்பது என்பது தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தில் நூறாண்டுகள் பின்னோக்கி நிற்கிறோம் என்று அர்த்தப்படுகிறது.
ஆயுதப் போராட்டம்
“ஒடுக்குமுறை இருக்கும் வரை ஒடுக்கப்படும் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்“. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பின்னே நின்று தமிழர்கள் போராடினார்கள். மிதவாத அரசியல் தலைமைகளின் போராட்டம் எதனையும் சாதிக்க முடியாத போது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பின்னே நின்றார்கள். உயிர் உடல் பொருள் ஆன்மா அத்தனையும் அர்ப்பணித்து போராட்ட களத்தில் நின்றார்கள், மரணத்தையும் ஏற்றார்கள்.
ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் தமிழ்த்தேசியம் பேசிய அரசியல்க் கட்சிகளின் பின்னே மக்கள் அணிதிரண்டார்கள். இனியும் அணி திரள்வார்கள். எப்போதும் போராட்ட குணம் உள்ள, சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்பு மிகுந்த மக்கள் கூட்டத்தை இன்று தமிழ் அரசியல் பரப்பில் நுழைந்து தலைமை தாங்குகின்ற கோமாளிகள் மக்களின் போராட்ட உணர்வை சீரழித்து தமிழினத்தை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்கின்ற சூழல் ஒன்று இப்போது தோன்றியிருக்கிறது.
ஒட்டி சுட்டான் பகுதியில் இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு தமிழ் இளைஞனின் படுகொலைக்கு நியாயம் கோரி தமிழ் மக்களை ஒருங்கிணைத்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. அதற்காக சோம்பேறித்தனமாக கதவடைப்பு போராட்டம் என்ற ஒன்றை 15ஆம் தேதி நடத்தப் போவதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அந்த அறிவிப்பின் பின்னான தமிழரசியல் பரப்பில் ஏற்பட்ட பல்வகை கருத்து முரண்பாடுகளும், எதிர்ப்பலைகளும் அந்த கதவடைப்பு போராட்டத்தை 18ஆம் திகதிக்கு தமிழரசு கட்சி மாற்றி இருக்கிறது.
இந்த பின்னணியை நாம் சற்று விரிவாக ஆராய்வது அவசியமானது. தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் ஆகஸ்ட் 15ம் திகதி கதவடைப்புக்கு அழைப்பு விடுத்தமை என்பது தமிழ் மக்களின் களச் சூழலை சரிவர புரியாமல், கொழும்பிலிருந்து கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகவே முதலில் இதை பார்க்க வேண்டும்.
மண்ணோடு ஒட்டிய வாழ்வும், மண்ணோடு ஒன்றிய உணர்வுமற்றும், மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாது, மக்களின் அன்றாட வாழ்வியலை புரிந்து கொள்ளாது எடுத்த இந்த முடிவானது, ""ரொட்டி இல்லா விட்டால் கேக்கை சாப்பிடுங்கள்"" என்று பிரான்ஸ் மன்னன் லூயி சொன்ன கூற்றின் களச்சூழலுக்கு ஒப்பானது.
தமிழரசு கட்சியின் இத்தகைய மாதனமுத்தாக்களுக்கு கொடி குடை ஆளவட்டம் பிடிக்கின்ற எடுபிடிகளும், வால்பிடிகளும் ஏதோ தமிழரசு கட்சியின் தற்போதைய தலைமைகள் வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் என்று கூவிக் கொண்டு திரிகின்றனர்.
ஆகஸ்ட் 15ஆம் திகதி மன்னார் மடுமாதா தேவாலயத்தின் திருவிழா என்பதையே அறியாத தமிழரசு கட்சி தமிழ் மக்கள் பற்றியோ, அல்லது சிங்கள பௌத்த பேரனவாத அரசு பற்றியோ ஏதாவது அறிந்திருக்குமா? என்ற கேள்வியை இப்போது எழுந்திருக்கிறது. இத்தகையவர்களால் தென்னாசியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரக் கட்டமைபை்பை கொண்டுள்ள சிங்கள பேரரசுக்கு எதிராக ஒரு புல்லைத்தானும் பிடுங்க முடியாது என்பதையே இது பறைசாற்றி இருக்கிறது.
மடுமாதா தேவாலய பிரதேசத்தின் நிலை
மடுமாதா தேவாலய உற்சவத்திற்கு இலங்கைத் தீவின் அனைத்து பாகங்களிலிருந்தும் கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி இந்துக்களும் அந்த திருவிழாவில் பெருவாரியாக கலந்து கொள்வர். அத்தகைய மடுமாதா தேவஸ்தானத்தின் திருவிழாவிற்கு மக்கள் சென்று தேவாரதனை நடத்தும் நாளில் ஒரு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது என்பது எத்தகைய ஒரு அரசியல் கத்துக்குட்டித்தனம்? அதுமட்டுமா இதற்கு எதிராக மன்னார் திருச்சபை எதிர்ப்பு தெரிவித்தமை அடுத்து ஆயரை சந்திக்க சுமந்திரன் விரைந்து சென்றார்.
இவ்வாறு சென்றவரை ஆயர் சந்திக்க மறுத்ததை அடுத்து குரு முதல்வரை சந்தித்தார். சரி குரு முதல்வரை சந்தித்தவர் தமது தவறை ஒப்புக்கொண்டு திகதியை மாற்றுவதான கூறியிருக்க வேண்டும்.
ஆனால் அங்கே குருமுதல்வருடன் பேசிவிட்டு குரு முதல்வருக்கு சுமந்திரன் சொன்னார் “நாங்கள் கட்சியுடன் கதைத்து பேசி முடிவெடுத்து அறிவிக்கிறோம்“ என்றாராம். ஐயகோ! இது என்ன கோமாளித்தனம்? கிறிஸ்தவ திருச்சபை பெரிதா? அல்லது இந்த அற்பர்கள் தலைமைதாங்கும் தமிழரசுக் கட்சி வலுவானதா? இப்படித்தான் முன்பு ஒருமுறை மறைந்த மன்னர் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டவரிடம் இரா சம்பந்தன் பேசிக் கொண்டிருக்கின்ற போது ""பிஷப் நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் முடிவை நாங்கள்தான் எடுப்போம்"" என்று கோமாளித்தனமாக கூறினாராம்.
இப்படித்தான் தேர்தலில் தோல்வியடைந்து பின்கதவால் பதில் செயலாளராகிய சுமந்திரனின் கூற்றும் அமைகிறது. ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இராணுவ கேந்திரத்தன்மை, மற்றும் யுத்த தந்திரங்கள், யுத்த வியூகங்களுக்கு உட்பட்ட மடுமாதா தேவாலய பிரதேசத்தின் நிலையை தீர்மானிப்பதில் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பையும் விஞ்சி மன்னார் ஆயர் இல்லமே முடிவெடுக்கும் சக்தியை பெற்றிருந்தது. இத்தகைய ஆயர் இல்லத்திற்கு சென்று இந்த கோமாளிகள் விடும் சேட்டைகளை என்னவென்று சொல்ல.
அதேவேளை இந்தக் காலத்தில் நல்லூர் திருவிழா ஆரம்பமாகி இருக்கிறது. எனவே நல்லூர் திருவிழாவில் பெருமளவு மக்கள் கலந்து கொள்வர். இந்த நிலையில் நல்லூர் ஆலய அரங்காவலர் சபை இவர்களுடைய இந்த அறிவிப்பை பற்றி எந்த சாட்டையும் செய்யவில்லை.
ஏனெனில் அவர்கள் இந்த தமிழரசு கட்சிக்காரர்களை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. காரணம் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறைமையின் சின்னமாகவும், கட்டளை பீடமாகவும், இராச்சியத்தின் அனைத்து முடிவுகளும் அந்தக் நல்லுார்க் கோயிலைமையப்படுத்தியே எடுக்கின்ற பாரம்பரிய ம் இருந்து வந்துள்ளது. இத்தகைய நல்லூர் ஆலயம் தமிழ் மக்களின் இறைமையின் சின்னமாக இப்போதும் சிங்களத் தரப்பால் கருதப்படுகிறது.
ஆகவேதான் சிங்களத் தலைவர்கள் வடக்கு நோக்கி சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்குச் செல்ல தவறுவதில்லை. எனவே நல்லூர் ஆலய அறங்காவலர்கள் இந்த அரசியல் கோமாளிகளின் கோமாளித்தனங்களை ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்பதே உண்மையாகும்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞனின் கொலைக்கு நியாயம் கோரி ஒரு போராட்டம் நடத்துவது என்பது களத்தில் இருக்கின்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும். களநிலவரத்தை அறியாதவர்களாக தமிழரசு கட்சியினர் இருக்கின்றனர் என்பது தமிழ் மக்களின் அரசியலில் இவர்களால் எத்தகைய பாத்திரத்தை எதிர்காலத்தில் வகிக்க முடியும் என்ற ஐயத்தையும் இப்போது தோற்றுவித்துள்ளது.
ஆகவே வடக்கில் இரண்டு முக்கிய பேராலயங்களின் திருவிழா காலத்தில் ஒரு கதவடைப்பு போராட்டத்தை நடத்தி மக்களின் அன்றாட வாழ்நிலையை சீர்குலைப்பதும், அசோகரிகங்களை ஏற்படுத்துவதும் மட்டுமல்ல கதவடைப்பு போராட்டம் வெற்றி பெறாமல் நீர்த்துப்போக செய்வதும், தமிழ் மக்கள் நீதிக்காக போராட இப்போது தயார் இல்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதுமே தமிழர் கட்சியின் இப்போதைய அரசியல் வியூகமா? என்ற சந்தேக கேள்வியை பலரும் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.
இது சிங்கள இனவாத அரசுக்கு மேலும் சேவகம் செய்வதாகவே அமையும். இத்தகைய செயல்பாடு எதிர்காலத்தில் தமிழரசு கட்சியையும் மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமையும்.
கதவடைப்பு
இத்தகைய இழுபறிகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பின்னர் தற்போது 18ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் என தமிழரசு கட்சி அறிவித்து விட்டது.
சரி அப்படியானால் இந்த கதவடைப்பு போராட்டம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனுக்கு நீதியைப் பெற்றுத் தருமா? அல்லது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை வெளி உலகத்திற்கு காட்ட முடியுமா? அல்லது சிங்கள அரசியலில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியுமா? என்பது பற்றி ஆராய்வதும் மிக அவசியமானதாகிறது.
கனரக பீரங்கிகளினாலும், கரும்புலிகளினாலும், பலதரப்பட்ட நவீன ஆயுதங்களாலும் இலங்கை அரசையும், அதன் முப்படைகளையும் தாக்கி கதி கலங்க வைத்த காலத்தில் கூட எதையும் சாதிக்க முடியாது.
இறுதியில் முள்ளிவாய்க்காலில் தோல்வி அடைந்திருக்கும் ஈழத் தமிழர்கள் சிங்கள அரசை ஒரு கதவடைப்பு போராட்டத்தினால் அசைத்து விடலாம், நடுநடுங்க செய்துவிடலாம், அல்லது பயப்படுத்தி விடலாம் என்று தமிழ் அரசுக் கட்சித் தலைமைகள் நினைக்கிறார்களோ? இப்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் என்பது பெரும் மக்கள் கட்டமைப்பை கொண்ட ஜேவிபியின் மாற்று முகம்.
இந்த தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை கதவடைப்பால் பயப்படுத்தி விட முடியுமா? அவர்கள் தென் இலங்கையில் செய்யாத ஆர்ப்பாட்டமா, கதவடைப்பா, அவர்களின் முன்னே தமிழ் மக்கள் செய்யும் கதவடைப்பு எம்மாத்திரம்? எதை சாதிக்கும்? நம்மவர் செய்யும் கதவடைப்பு என்பது பிளிறிக்கொண்டு வரும் மதயானைக்கு கல் எறிவதற்கு ஒப்பானது.
கதவடைப்பு போன்ற சாத்வீக வழியிலான ஜனநாயக போராட்டங்கள் காலவதியாகிவிட்டன என்பதே அறியாமல் தமிழரசு கட்சி இப்போதும் கற்காலத்தை தாண்டிவந்து வில்லும் அம்பையும் எடுத்து இப்போதுதான் யுத்தத்திற்கு தயாராகிறது என்றால் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இவர்களின் அரசியல் புரிதல்தான் என்ன? இன்றைய சூழமைவில் இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கவல்ல போராட்ட முறைமைகளை நாம் கண்டறிய வேண்டும். அதனை சர்வதேச பயப்படுத்தக் கூடியவாறு, சர்வதேச கவனத்தை ஈர்க்கக் கூடியவாறு நடத்த வேண்டும்.
வெறுமனே தமிழர் தாயகமான வட-கிழக்கில் ஒரு ஜனநாயக வழி போராட்டத்தை நடத்தி சிங்கள அரசை இப்போது பணிய வைக்க முடியாது. இனிமேலும் மக்களை ஏமாற்றி, மடைமாற்றி அரசியல்வாதிகள் குண்டாஞ் செட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது. கதவடைப்பு போராட்டம் என்பது ஒரு சோம்பேறிப் போராட்டம்.
கதவடைப்பு போராட்டத்தை நடத்தி தமிழர்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்து விட்டால் சிங்கள தேசம் பயந்து விடுமா என்ன? இது தமிழ் மக்களை நாம் போராடுகிறோம் என்று சொல்லி ஏமாற்றுகின்ற செயலாகவே அமையும்.
கதவடைப்பு போராட்டத்திற்கு இப்போதும் தமிழ் மக்கள் ஆதரவளிப்பார்கள். ஏனெனில் அவர்கள் சிங்கள அரசை எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள். தமக்கு நியாயம் வேண்டும் என்ற வேணவாவும், வேட்கையும், சுதந்திர உணர்வும் கொண்டவர்கள்.
ஆகவே எதிரிக்கு எதிராக எந்த வழியிலும் செயல்படுவதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். கதவடைப்பு போராட்டம் அரசியல் தலைவர்களுக்கு நோகாத போராட்டம். எந்தச் சிரமமும் இல்லாத போராட்டம். வெறும் ஒரு அறிவிப்பை அறிவித்துவிட்டு வீட்டுக்குள் ஒய்யாரமாக படுத்து உறங்கும் போராட்டம் என்பது மட்டுமல்ல சிங்கள அரசுக்கும் நோகக்கூடாது, வலிக்க கூடாது, அவர்களை கோபப்படுத்த கூடாது என்ற எண்ணப்பாங்கில் மேற்கொள்ளப்படும் போராட்டம் என்றே கருதப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம்
இப்போதும் காலாவதியாகிவிட்ட, தோல்வியடைந்த, எந்தப் பயன் தராத ஒரு போராட்ட வழிக்கு தமிழ் மக்களை தொடர்ந்து இழுத்துச் சென்று அவர்களை அலைக்கழித்து சலிப்படைய வைப்பது ஒரு சமூக விரோத செயல், இது மிகப்பெரிய சமூகக் தீங்கு, மட்டுமல்ல தமிழர் தேசத்தின் தேசத்துரோக கூற்றமுமாகும். தமிழர் தாயகத்துக்குள் நாம் கத்தினால் என்ன? கதறினால் என்ன? குழறிக் கூத்தாடினால் என்ன? சிங்கள தேசம் கண்டு கொள்ளப் போவதில்லை. சர்வதேசமும் கண்டு கொள்ளப் போவதில்லை.
ஆகவே தமிழருடைய போராட்டம் அல்லது நம்மவர்களுடைய யுத்தம் தமிழர் தாயகத்தில் நடத்தப்படக்கூடாது. அதை எதிரியின் கோட்டைக்குள், எதிரியின் பாசறைக்குள், எதிரியின் தலைநகரத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அதுவே சிங்கள அரசியலை திக்கிமுக்காடச் செய்யும்.
சிக்கலுக்குள் உள்ளாக்கும். அதுவே சர்வதேச கவனத்தையும் ஈரும். அதை விடுத்து நாம் நமது கொல்லைப்புறத்துக்குள் நின்று கூக்குரல் இடுவதில் எந்தப் பயணம் கிடையாது. தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயக முறை தழுவிய போராட்டங்கள் சிங்களத்தின் தலைநகரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிங்களத்தின் தலைநகரத்தில் உள்ள முக்கிய திணைக்களங்கள் இலாகாக்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் முன்பாக நடத்தப்பட வேண்டும். அதுவே இலங்கை அரசை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தவும், இலங்கை அரசை நெருக்கடிக்குள் சிக்க வைக்கவும், நிர்பந்திக்க வைக்கவும் முடியும்.
எதிரியை சிக்கலுக்குள் சிக்க வைப்பதன் மூலம் நிர்பந்தங்களை ஏற்படுத்தி நிர்பந்தங்களின் ஊடாகவே தமிழ் மக்கள் ஒரு உப்புக் கல்லைத்தானும் சிங்கள தேசத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதே சம நேரத்தில் தமிழர் தாயகத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகங்களை முற்றுகையிடுதல், பொலிஸ் நிலையங்களை முற்றுகையிடுதல், வங்கி போன்றஅரசாங்கத்துக்கு வருமானம் கொடுக்கும் நிறுவனங்களை முற்றுகையிடுதல் போன்ற போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர எதிரிக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அப்பாவி தமிழ் மக்களின் அன்றாட உழைப்புகளையும் வியாபாரங்களையும் முடக்கக்கூடிய கடையடைப்புக்களால் எந்தப் பயனும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
மேலும் ஆர்ப்பாட்டங்கள் கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பன களத்தில் மக்களை அணி திரட்டி வீதியில் இறக்குவதன் மூலமே கிளர்ச்சிகளை புரட்சிகளாக்க முடியும்.
மக்களின் புரட்சியின் மூலமே ஜனநாயகத்தை தழைத்தோங்க வைக்கவும், நிலைநாட்டவும், ஜனநாயகத்தை மீட்கவும் முடியும். மனித உரிமைகளை வென்றெடுக்கவும் முடியும். ஆகவே பரவலாக ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களை முன்னெடுங்கள் என்று வரலாறு ஈழத் தமிழர்களை வேண்டி நிற்கிறது.
ஈழத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கு கட்டளையிடுகிறது. வரலாற்றில் இருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். வரலாறு நமக்கு பாடங்களை அதிகம் கற்றுத் தந்திருக்கிறது.
ஆனாலும் அந்தப் பாடங்களில் இருந்து நாம் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இன்றைய ஈழத் தமிழரின் அரசியல் செல்போக்கு வெளிப்படுத்தி நிற்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 17 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



