இதுவே கடைசி வாய்ப்பு: ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு உடன்படாவிட்டால் அந்த நாடே தரைமட்டமாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
'ஃபாக்ஸ் நியூஸ்' (Fox News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது, ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ள "கடைசி வாய்ப்பு" இதுவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பராக் ஒபாமாவின் தவறு
2015 ஆம் ஆண்டு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் "தவறை" தான் மீண்டும் செய்யப்போவதில்லை என்றும், இந்த முறை பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் பாரிய அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமையுடன் தற்காலிக போர்நிறுத்தக் காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்குள் ஈரான் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என வொஷிங்டன் தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.
"ஒன்று ஈரான் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும், இல்லையெனில் அந்த நாடு முழுமையாக அழிக்கப்படுவதை எதிர்கொள்ள வேண்டும்" எனத் தனது வழக்கமான அதிரடிப் பாணியில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் தொனியிலான கருத்து சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.