இஸ்ரேல் இராணுவத்தின் திடீர் தாக்குதல்: ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள் பலி
இஸ்ரேல்(Israel) இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரின் 3 மகன்மார் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியேவின் மகன்கள் ஹாசேம், ஆமீர் மற்றும் முகமது ஆகிய 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே(Ismail Haniyeh) உறுதி செய்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் கோரிக்கை
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
“பாலஸ்தீன தலைவர்களின் குடும்பத்தினரை இஸ்ரேல் இராணுவம் குறிவைத்து தாக்கினாலும் அவர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள் என்றும், இந்த படுகொலைகளால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது ஹமாஸ் அமைப்பின் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 33,482 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 76,049 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜோ பைடன் எச்சரிக்கை
அதேவேளை, இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
காசா போரில் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், காசா மக்களுக்கான உணவு விநியோகத்தை இஸ்ரேல் இராணுவம் தடுத்து வருவதால், காசாவில் ரமலான் பண்டிகை கொண்டாட்டங்கள் முடங்கியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |