வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ஜப்பான் மத்திய வங்கி!
ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான 'பேங்க் ஒஃப் ஜப்பான்' நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் தனது கொள்கை வட்டி விகிதத்தை 1.25% ஆக உயர்த்தியுள்ளது.
இது கடந்த 31 ஆண்டுகளில் ஜப்பானில் பதிவான மிக உயர்ந்த வட்டி விகித அளவாகும்.
வங்கிக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், வட்டி உயர்விற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பொருளாதார வளர்ச்சி
பிரதமர் சானே தகாய்ச்சி தனது அமைச்சரவையை மாற்றியமைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்த மறுநாளே மத்திய வங்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இந்த நிலையில், மத்திய வங்கியின் தலைவர் கசுவோ உயேடா செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
இனிவரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் எந்த வேகத்தில் மீண்டும் உயர்த்தப்படும் என்பது குறித்த முக்கியக் குறிப்புகள் இந்தச் சந்திப்பில் வெளியாகும் என உலக நிதிச் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வட்டி விகிதம் அதிகரிப்பு
மேலும் இந்த வட்டி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் ஜப்பானிய நாணயமான 'யென்' (Yen) மதிப்பு வலுவடையத் தொடங்கியுள்ளது.

ஜப்பானில் கடன் வாங்குவோருக்கான வட்டிச் சுமை சற்றே அதிகரிக்கும் என்றாலும், வங்கிகளில் பணம் சேமிப்போருக்குக் கூடுதல் வட்டி கிடைக்கும்.
நாட்டின் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்தி, நுகர்வோர் சந்தையை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை உதவும் எனக் கருதப்படுகிறது.