இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளை முதல் கடுமையாகும் நடைமுறைகள்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் (Seat Belt) அணிவது கட்டாயமாக்கும் சட்டம் செப்டம்பர் 19 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான ஓராண்டு கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலையில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது
அதன்படி, நாளை முதல் சீட் பெல்ட் இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பொலிஸ் வலியுறுத்துகின்றது.
சீட் பெல்ட் அணியாமையினால் விபத்துகள் மற்றும் சம்பவங்களின் அபாயம் அதிகரிப்பதால், இந்த சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டம் அபராதம் விதிப்பது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது என்ற ஒரே நோக்கத்திற்காக செயல்படுத்தப்படவில்லை என்றும், மாறாக சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிய வேண்டும் என்றும், இருக்கைப் பட்டைகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய முயற்சிக்கக் கூடாது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், இருக்கைப் பட்டைகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களின் உற்பத்தியாளர்கள் இருக்கைப் பட்டைகளைப் பொருத்தாத காரணத்தால், அதை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் தேவைப்பட்டது என்று தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்களில் இருக்கைப் பட்டைகளைப் பொருத்துவதற்காகப் பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கடைசி கால அவகாசமும் இன்றுடன் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாளை முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்