ஒரு பில்லியன் டொலர் பணமோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குப் பிணை
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான சட்டவிரோதப் பணமோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தனியார் வங்கி அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று(17.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணை உத்தரவு
அதேவேளை, பிணையாளிகள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தாங்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் முகமது ஜிஃப்ரியின் பிணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான தொழிலதிபரும் மற்றொரு சந்தேக நபரும் 1ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.