ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபா ஒப்பந்தம்! இரு சிறுவர்களை பலியெடுத்த தெஹிவளை குண்டுவீச்சின் பின்னணி அம்பலம்
தெஹிவளையில் அண்மையில் இரண்டு அப்பாவிச் சிறுவர்களைப் பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் விவகாரம் வெறும் ஒரு லட்சத்தி இருபதினாயிரம் ரூபா ஒப்பந்தத்துக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த குண்டுவீச்சுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விபரம் வெளிப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
தெஹிவளையில் கடந்த 11ஆம் திகதி ஒரு வீட்டின் மீது கையெறி குண்டை வீசிய நபர், பொலிசாருக்கு பல தகவல்களை அளித்துள்ளார்.
இந்தக் கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு அப்பாவிச் சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது தந்தை படுகாயம் அடைந்தார். பொலிஸ் மா அதிபரின் (IGP) அறிவுறுத்தலின் பேரில், இந்தச் சம்பவம் குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு அனுப்பப்பட்டன.

இத்தகைய சூழலில், குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையின் போது, 2025ஆம் ஆண்டு நெதிமாலை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததும், ஜூலை 19ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை தெரியவந்தது.
பின்னர், ஒகஸ்ட் 1ஆம் திகதி, ரத்மலானையில் குடு அஞ்சுவின் நெருங்கிய கூட்டாளியை அவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
தெஹிவளை குண்டுத் தாக்குதல்
போதியாவத்தே அவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தனக்கு ஐந்து லட்சம் ரூபா பணமும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை வீட்டில் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான ஒப்பந்தத்தை போதியாவத்தே அவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியிலும் கையெறி குண்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.
மேலும், தாக்குதலுக்குத் தொடர்புடைய வீட்டைக் காட்டுவதற்காக மற்றொரு நபர் அங்கு இருந்ததாகவும் சந்தேக நபர் கூறியதாகத் தெரிகிறது. இருப்பினும், அந்த நபர் தனக்குத் தவறான வீட்டைக் காட்டியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, போதியாவத்தேஅவிஷ்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோர் தனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து, பிபிலே பகுதிக்குத் தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பிபிலேயில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், தாக்குதலுக்காக வீட்டைக் காட்டிய நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது, அவிஷ்கவும் கொஸ்மல்லியும் அதற்காக அவருக்கு 20,000 ரூபா கொடுத்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவால் நடத்தப்பட்டு வருகின்றன.