அர்ச்சுனா இராமநாதன் எம்.பிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு
பேஸ்லைன் வீதியில் கார் ஒன்றை விபத்துக்குள்ளாக்கி, ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.
கார் விபத்து
2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி லசந்த அபேவர்தன என்பவர் பேஸ்லைன் வீதியில் காரை செலுத்திச் சென்றபோது, அவரது காரை விபத்துக்குள்ளாக்கி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கிராண்ட்பாஸ் பொலிஸார் இந்த வழக்கை முன்னெடுத்து வருகின்றனர். இன்று (17) முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவடைந்தது.
இதனையடுத்து, பிரதிவாதித் தரப்பு சாட்சிய விசாரணைக்காக வழக்கு நவம்பர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.