மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்
கொழும்பு- மட்டக்குளியில் பல வாகனங்கள் நேற்று முன்தினம் மோதிய சம்பவம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய 52 வயதான சாரதி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் மீது கொலை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்தனர்.
சாரதியில் பரபரப்பு வாக்குமூலம்
தனது மகளை மேலதிக வகுப்பிற்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வரச்சென்றுகொண்டிருந்தபோது தான் செலுத்திச்சென்ற மின்சார வாகனத்தின் வேகம் தானாகவே அதிகரித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும், தான் செலுத்திச்சென்ற கார் திடீரென அதிவேகமாக சென்று, வீதியின் இருபுறமும் இருந்த மக்கள் மற்றும் வாகனங்கள் மீது ஏறிச் சென்றதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
விபத்துக்கு காரணமான காரில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த கார் தொடர்பாக மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலை, விபத்தைத் தடுக்கத்தவறுதல், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்தல், நபர்களுக்கு மரணம் மற்றும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதிவேகமாக சென்ற கார், நெடுஞ்சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் உட்பட 7 வாகனங்கள் மீது மோதியதில், அவை பலத்த சேதமடைந்தன.
விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபரான தொழிலதிபர், தனது காரை அதிவேகமாக செலுத்திச்சென்ற, சாலையின் இருபுறமும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனை
இது குறித்து கொழும்பு வடக்குப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எரிக் பெரேரா தெரிவிக்கையில், மட்டக்குளிய பெர்குசன் சந்திப்பு மிகவும் குறுகலான சாலையாகவும், அடிக்கடி நெரிசலாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், அத்தகைய குறுகலான சாலையில் மின்னல் வேகத்தில் வாகனம் செலுத்தியதாலேயே இந்த கோரமான விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து நடந்த நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விபத்து நடந்த இடத்தில் கூடியிருந்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்கவும் பொலிஸ் நடவடிக்கை எடுத்ததாகவும் மட்டக்குளிய பொலிஸ் பொறுப்பதிகாரி அஜந்த புஷ்பகுமாரா தெரிவித்தார்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி, விபத்தை ஏற்படுத்திய சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும், விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து அறிக்கை கோரப்படும் என்றும், காரைப் பெறுவதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிபுணர் அறிக்கை மற்றும் ஒரு பொறியியல் அறிக்கை அனுப்பப்படும் என்றும் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கோர விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுக்கள், பதற்ற நிலை ஏற்படுவதற்கு முன்பே சந்தேகத்திற்குரிய சாரதியை கைது செய்து்ளளனர். இல்லையெனில், கோபமடைந்த அப்பகுதி மக்கள் காரைத் தீயிட்டுக் கொளுத்தி, சாரதியை தாக்கியிருக்கக்கூடும் என்று பொலிஸ் கூறுகின்றது.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வெளியான தகவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


